உள்ளூர் செய்திகள்

சாய்பாபாகாலனியில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதால் மக்கள் அவதி

Published On 2022-11-05 14:56 IST   |   Update On 2022-11-05 14:56:00 IST
  • வீட்டிற்கு வெளியே நிறுத்தி விடுவது வழக்கம்.
  • சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

குனியமுத்தூர்,

கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா காலனி சிக்னல் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் ஏராளமான சரக்கு வாகனங்கள் காய்கறிகளை இறக்கி, ஏற்றி செல்வது வழக்கம்.

மார்க்கெட்டுக்கு எதிர்ப்புறம் ஸ்ரீ நாராயண குரு சாலை உள்ளது. இது குடியிருப்பு பகுதியாகும்.

இந்நிலையில் மார்க்கெட்டில் வரும் சரக்கு வாகனங்கள் அனைத்தும் ஸ்ரீ நாராயண குரு சாலையில் கடைசி வரை நிறுத்தி விடுகின்றனர்.இதனால் பொது மக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது:-

பெரும்பாலும் இப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் தங்களது 4 சக்கர வாகனங்களை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விடுவது வழக்கம்.

ஆனால் சரக்கு வாகனங்களை சாலை முழுவதும் வரிசையாக நிறுத்தி விடுகின்றனர்.

இதனால் குடியிருப்போர் தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் சரக்கு வாகனங்களை வரிசையாக நிறுத்தி விடுவதால் வாகனங்களுக்கு பின்புறம் மறைவாக நின்று கொண்டு ஒரு சில ஆசாமிகள் சமூக விரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அப் பகுதியில் வசிக்கும் குடியிருப்பு வாசிகளை முகம் சுளிக்க வைக்கிறது. பெரும்பாலும் இப்பகுதி சுத்தமான பகுதி ஆகும். ஆனால் தற்போது இந்த வாகனங்கள் காரணமாக அசுத்தம் நிறைந்த பகுதியாக காட்சி இருக்கிறது.

தற்போது மழை காலமாக இருப்பதால், சரக்கு வாகனங்களில் இருக்கும் காய்கறி கழிவுகள் மழை நீரில் அடித்துக் கொண்டு தெருவில் கொட்டி அசத்தமாக காட்சி அளிக்கிறது.

இந்த சாலையில் தனியார் ஆஸ்பத்திரிகளும், தனியார் பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

எனவே சரக்கு வாகனங்களை நிறுத்த தடை விதிக்க வேண்டும். அதிகாரிகள் விரைந்து இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Tags:    

Similar News