உள்ளூர் செய்திகள்

சிவகிரி அருகே பொது போக்குவரத்து பாதைகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி

Published On 2023-06-20 08:51 GMT   |   Update On 2023-06-20 08:51 GMT
  • பாதையை பல ஆண்டு காலமாக சிலர் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.
  • தனியார் பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து கொத்தாடப்பட்டி பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

சிவகிரி:

சிவகிரியில் இருந்து விஸ்வநாதபேரி, தென்மலை, ராயகிரி போன்ற பகுதிகளுக்கு தார் சாலை வசதி இல்லாத காலத்தில் மக்கள், வாகனங்கள், கால்நடைகள் போக்குவரத்து பாதையாகவும், தென்மலை, வடுகபட்டி, ராயகிரி விஸ்வநாதபேரி போன்ற பகுதிகளில் இருந்து சிவகிரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாணவ - மாணவிகள் கல்வி பயில்வதற்கு சென்று வர முக்கிய பாதையாகவும், தேவிப்பட்டணத்திற்கு மேற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள வனபகுதிகளுக்கும், புஞ்செய் பகுதிகளுக்கு கால்நடைகள் மேய்ச்சலுக்காக சென்று வருவதற்காகவும் பயன்படுத்தி வந்த 30 அடி அகலம் கொண்ட பசுப்பாதை என்று அழைக்கப்பட்ட பாதையை பல ஆண்டு காலமாக சிலர் முற்றிலும் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தனர்.

சிவகிரி தாலுகா பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடங்களை கைப்பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டதின்பேரில் சிவகிரி தாசில்தார் ஆனந்த் தலைமையில், வாசு தேவநல்லூர் பஞ்சாயத்து யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வள்ளி மயில், ஊர் நல அலுவலர் தெய்வானை ஆகியோர் முன்னிலையில், சிவகிரி அருகே விஸ்வநாதபேரி தனியார் உயர்நிலைப்பள்ளிக்கு மேற்கு பகுதியில் இருந்து சிவகிரி பேரூராட்சி பகுதியை சேர்ந்த கொத்தாடப்பட்டி பகுதி வரை உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இதில் மண்டல துணைத் தாசில்தார் வெங்கடசேகர், சிவகிரி வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அலுவலர் சங்கர வடிவு, தலையாரி வேல்மு ருகன், சர்வேயர் பாண்டி செல்வி, விஸ்வநாதபேரி ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி மணிகண்டன், துணைத்தலைவர் காளீஸ்வரி, செயலர் உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்ட னர்.

Tags:    

Similar News