உள்ளூர் செய்திகள்

நாரதர் நகர்வலம்-எங்கு பார்த்தாலும் குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சுந்தராபுரம் கல்லுக்குழி சாலை

Published On 2023-07-27 14:40 IST   |   Update On 2023-07-27 14:40:00 IST
  • சாலை வழியாக 20-க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் அங்கும் இங்குமாக சென்ற வண்ணம் இருக்கும்.
  • பல ஆண்டுகளாக கவனிக்காமல் விடப்பட்டிருக்கும் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

 கோவை,

தொழில் நகரான கோவையில் பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாக மாறி காட்சி அளிக்கிறது. மெயின் சாலைகள் மட்டுமின்றி, தெருக்களில் உள்ள சாலைகளும், குறுக்கு சாலைகளும் மிகவும் பழுதடைந்து, குண்டும், குழியுடன் வருவோரை வரவேற்க காத்திருக்கின்றன இந்த சாலைகள்.

இந்த சாலைகளால் மக்கள் படும் கஷ்டங்களை சொல்லிமாளாது. அந்தளவுக்கு சாலைகள் மக்களை சிரமப்படுத்தி வருகிறது.

கோவை பொள்ளாச்சி ரோடு குறிச்சி சுந்தராபுரம் அருகே உள்ளது கல்லுக்குழி வீதி. இந்த பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இதுதவிர ஒரு மேல்நிலைப்பள்ளி, கடைகள் மற்றும் சில நிறுவனங்களும் இயங்கி வருகின்றன.

மேலும் இந்த வீதியானது அம்மணி அம்மாள் காலனி ,அம்மன் நகர், பூங்கா நகர், மாச்சம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதி ,துளசி கார்டன், அருள் கார்டன், திருநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சாலையாகவும் உள்ளது. இதனால் இந்த சாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலையானது தற்போது இருப்பது போன்று இல்லை. இந்த சாலையிலும் 20க்கும் மேற்பட்ட மினி பஸ்கள், பல்வேறு வாகனங்களும், மோட்டார் சைக்கிள்களும், கார்களும் சென்று வந்த சாலை தான். இப்போது எந்த வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.

பல வருடங்களுக்கு முன்பு பழுதாகியும் இதுவரை இந்த சாலையானது எந்தவித பராமரிப்புமின்றி, குண்டும் குழியுமாக வாகன ஓட்டிகளை வருத்தி எடுக்கும் சாலையாக மாறி விட்டது. இந்த வழியாக செல்பவர்களில் பலர் கீேழ விழுந்து எழும் நிலை காணப்படுகிறது.

குறிப்பாக பள்ளிகளுக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவிகள் சைக்கிளில் வரும் போது குண்டும், குழி யில் கீழே விழுந்து எழுந்து செல்லும் நிலையே நீடிக்கிறது. நடந்து செல்வதும் மிகவும் சிரமமாக தான் இருக்கிறது. ஏதாவது வாகனம் அங்கு வருகிறது என்று நினைத்து வழிவிட ஒதுங்கும் போது, குண்டுகளில் விழும் நிலை உள்ளது. 7 வருடங்களுக்கு முன்பு தார்சாலையுடன் மிகவும் நன்றாக காட்சியளித்த இந்த சாலையானது தற்போது தார்சாலை என்பதை பார்த்தே வருடங்கள் கடந்து விட்டது. இதுவரை அந்த சாலைக்கு விமோஷனம் கிடைத்தபாடில்லை.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக இச்சாலையானது தார் சாலையாக பள,பளவென்று காட்சி அளித்தது. ஒரு நாளைக்கு இந்த சாலை வழியாக 20-க்கும் மேற்பட்ட மினிபஸ்கள் அங்கும் இங்குமாக சென்ற வண்ணம் இருக்கும்.

அடிக்கடி மினிபஸ் வருவதால் நாங்களும், பஸ்சில் ஏறி எங்கள் வீட்டில் முன்பே இறங்கி விடுவதால் எங்களுக்கு எந்தவித களைப்புமே தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது அப்படி இருந்த சாலையா இப்படி இருக்கிறது என்று நினைக்கும் போது எங்களுக்குள் வருத்தம் ஏற்படுகிறது.வீட்டு வாசலை விட்டு இறங்குவதற்கு கூட எங்களுக்கு பயமாக இருக்கிறது.

அந்த அளவுக்கு சாலை கரடு, முரடாக, குண்டும், குழியாக காட்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளாக வீதிகளை தோண்டி, தோண்டி மூடியதால் சாலை முற்றிலும் சேதமாகி விட்டது. ஆங்காங்கே தெருக்களில் பள்ளங்கள் தோண்டி தோண்டி மூடப்படுவதால் வீதி முழுவதும் சிறு சிறு கற்கள் நிறைந்து காணப்படுகிறது. தற்போது இந்த சாலையில் இருசக்கர வாகனம் செல்வதே மிக சிரமமாக தான் இருக்கிறது. அந்தளவுக்கு மோசமாகி விட்டது.

மேலும் ஆங்காங்கே கிடக்கும் ஜல்லி கற்கள் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களின் டயர்களில் குத்தி பஞ்சராகும் சூழ்நிலை உள்ளது.

குழிகள் தோண்டப்பட்டு காட்சி அளிப்பதுடன், சில நேரங்களில் வேலை என கூறி தெருவையும் அடைத்து விடும் சூழலும் உள்ளது. அந்த சமயங்களில் இரண்டு, மூன்று தெருக்கள் சுற்றி தான் வீட்டிற்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

இருசக்கர வாகனத்தை வீட்டிற்குள் கொண்டு செல்ல முடியாது. அந்த வாகனத்தை பக்கத்து தெருவில் நண்பர்களிடம் சொல்லி நிறுத்தி வருகிறோம். அந்தளவுக்கு சாலை மிகவும் மோசமாகி விட்டது.

மழைக்காலம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். அனைத்து வீதிகளும், சேறும், சகதியுமாக காட்சியளிக்கும். மேடு பள்ளங்களில் மழை நீர் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகிறது. மேலும் அவ்வப்போது துர்நாற்றம் வீசும் சூழ்நிலை காணப்படுகிறது.

இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீண்ட நாட்கள் மழை நீர் தேங்கி நிற்பதால் பாம்புகள் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. இதனால் தினமும் பயந்து பயந்து வாழ்க்கையை கழிக்க வேண்டிய அவல நிலை உள்ளது. பல ஆண்டுகளாக கவனிக்காமல் விடப்பட்டிருக்கும் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

Tags:    

Similar News