உள்ளூர் செய்திகள்

உரிய காலத்தில் வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்

Published On 2023-11-17 10:02 GMT   |   Update On 2023-11-17 10:02 GMT
  • நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன.
  • வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாமக்கல்:

நாமக்கல் நகரில் 25 ஆயிரம் குடிநீர் இணைப்புகள், 56 ஆயிரம் சொத்துவரி விதிப்புகள், 10,400 பாதாள சாக்கடை இணைப்புகள். 6 ஆயிரம் தொழில் வரி இனங்கள், 9 ஆயிரம் காலிமனைகள் உள்ளன. இவற்றின் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 27 கோடி வருவாய் கிடைக்கிறது.

இதனைக்கொண்டு நகரில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் நகராட்சி பணியாளர்களுக்கு சம்பளம், மின் இணைப்பு கட்டணம் போன்றவற்றை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. நடப்பு ஆண்டுக்கான சொத்து வரி, தொழில்வரி வசூல் செய்யப்பட்டு வருகின்றன.

இது குறித்து நாமக்கல் நகராட்சி கமிஷனர் சென்னுகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் நகராட்சி 39 வார்டுகளை உள்ளடக்கிய சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துவரி, காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம் உள்ளிட்ட இனங்களில் இதுவரை 35 சதவீத தொகை மட்டுமே வசூல் செய்யப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 65 சதவீத தொகை நிலுவையாக உள்ளது.

பொதுமக்களில் பெரும்பாலானோர் வரி மற்றும் கட்டணங்களை மார்ச் மாதம் செலுத்த வேண்டும் என தவறுதலாக கருதி வருகிறார்கள். தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருந்திய சட்டத்தின் படி முதல் அரையாண்டுக்கான வரி இனங்கள் ஏப்ரல் 30ந் தேதிக்கு முன்னரும், இரண்டாம் அரையாண்டிற்கான தொகையினை அக்டோபர் மாதம் 31ந் தேதிக்கு உள்ளும் செலுத்தி இருக்க வேண்டும்.

20232024ம் நிதியாண்டிற்கான முதல் மற்றும் இரண்டாம் அரையாண்டு உரிய தொகையினை முழுவதுமாக கடந்த 31ந் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். எனவே தங்களது வரி மற்றும் கட்டணங்களை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும் வருகிற 30ந் தேதிக்குள் நிலுவையின்றி செலுத்தி, நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தாதவர்களின் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு துண்டிக்கப்படுவதுடன், ஜப்தி நடவடிக்கை மற்றும் சட்ட ரீதியாக தொகையினை வசூல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News