உள்ளூர் செய்திகள்

கால்நடை மருத்துவ முகாம், கண்காட்சியை கலெக்டர் டாக்டர் உமா தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

Published On 2023-08-05 07:20 GMT   |   Update On 2023-08-05 07:20 GMT
  • முன்னாள்‌ முதல்- அமைச்சர்கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும்‌ சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.
  • இந்த முகாமில்‌ கால்நடைகளுக்கு சிறு அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சைகள்‌ உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகள்‌ அளிக்கப்படும்‌.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம், ராசி புரத்தை அடுத்த கூனவேலம்பட்டி யில் முன்னாள் முதல்- அமைச்சர்கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.விழாவை கலெக்டர் டாக்டர். உமா தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை, கால்நடை மருத்துவக்கல்லூரி ஆராய்ச்சி நிலையம் மற்றும் நாமக்கல் ஆவின் ஆகிய துறைகள் இணைந்து நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக 27.06.2023 அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 1,125 கால்நடைகளும்,

இரண்டாம் கட்டமாக 21.7.2023 அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமில் 1,202 கால்நடைகளும் பயனடைந்துள்ளன. தொடர்ந்து நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், கூனவேலம்பட்டியில் நடத்தும் மாபெரும் கால்நடை மருத்துவ முகாம் சிறப்பான முறையில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிறு அறுவை சிகிச்சை, மலடு நீக்க சிகிச்சைகள் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகள் அளிக்கப்படும். இலவச செயற்கைமுறை கருவூட்டல் செய்யப்படும். ஸ்கேன் கருவி மூலம் ஆடு, மாடுகளுக்கு சினை பரிசோதனை மேற்கொள்ளப்படும். ஆடு, கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்படும். மாடு, கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடப்படும். ஆண் மற்றும் பெண் நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படும். ரத்தம், பால், தோல் மற்றும் சாண மாதிரிகள் பரிசோதனை, மடிநோய் கண்டறியும் சோதனை மேற்கொள்ளப்படும்.

மேலும் இலவசமாக தீவனக் கரணைகள் மற்றும் விதைகள் வழங்கப்படும். சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் மற்றும் சிறந்த கறவைப் பசு பராமரிப்போருக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. கால்நடை கண்காட்சி மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து நிபுணர்கள் சிறப்புரை மற்றும் விவசாயிகளுடன் கலந்துரையாடல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது கால்நடைகளை முகா மிற்கு கொண்டு வந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஜெகநாதன், கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் மருத்துவர் (பொறுப்பு) பாலசுப்பரமணியன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் நடராஜன், துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு துறை) மருத்துவர்.டி.என்.அருண்பாலாஜி, உதவி இயக்குநர் (கால்நடை பராமரிப்புத்துறை) மருத்துவர் என்.மருதுபாண்டி, உதவி பொது மேலாளர் (ஆவின்) லிடியா, ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி, கால்நடை மருத்துவர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News