உள்ளூர் செய்திகள்

பிளஸ்-1 பொதுத்தேர்வு ரத்தா?: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

Published On 2023-03-16 07:20 GMT   |   Update On 2023-03-16 09:53 GMT
  • பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பிளஸ்-2 பொதுத்தேர்வில் எதனால் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் என ஆய்வு செய்ய வேண்டும்.

சென்னை:

சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கல்வித்துறையின் உயர் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டினார். இதில் துறையின் செயலாளர் காகர்லா உஷா, கமிஷனர் நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி, தேர்வுத் துறை இயக்குனர் நாகராஜ முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.

இவர்களுடன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும் காணொலி வாயிலாக இணைந்திருந்தனர். கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்வு எழுத வராத 50 ஆயிரத்து 674 மாணவர்களின் படிப்பை மீண்டும் தொடர வைக்க என்ன செய்யலாம் என்று கருத்து கேட்டார். பரீட்சை எழுத முன்வராத காரணத்தை ஒவ்வொரு மாணவரிடம் கேட்டறிய வேண்டும் என்றும் இதற்காக அவர்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் அச்சத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அம்மாணவர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

* தேர்வின் அவசியத்தை மாணவர்களுக்கு அறிவுறுத்தி பெற்றோர்கள் தேர்வெழுத அனுப்பி வைக்க வேண்டும். அனைத்து மாணவர்களையும் தேர்வெழுத வைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்படுகிறோம்.

* 10ம் வகுப்பில் ஆல் பாஸ் செய்தது கூட மாணவர்கள் தேர்வுக்கு தயங்குவதற்கான ஒரு காரணமாக கருதப்படுகிறது.

* பிளஸ்-1 பொதுத்தேர்வை ரத்து செய்ய வாய்ப்பில்லை.

* பிளஸ்-2 பொதுத்தேர்வில் எதனால் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் என ஆய்வு செய்ய வேண்டும். அடுத்தடுத்த தேர்வுகளுக்கு மாணவர்களை வரவழைப்பது குறித்து ஆலோசித்தோம்.

* மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து மாவட்ட வாரியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வராதது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும் ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Tags:    

Similar News