உள்ளூர் செய்திகள்

விதிமுறைகள் மீறப்பட்டதா? பள்ளி கல்வித்துறை விசாரணை

Published On 2022-11-24 07:49 GMT   |   Update On 2022-11-24 07:49 GMT
  • விதிமுறைகள் மீறப்பட்டதா? பள்ளி கல்வித்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • மதுரை மாவட்டத்தில் ஓடும் பள்ளி வாகனங்களை தினந்தோறும் சோதனை நடத்த வேண்டும்.

மதுரை

மதுரை திருப்பாலை தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாகனத்தில் சென்ற 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் மூச்சுத் திணறல் காரணமாக மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை விசாரணையின் நடத்தியது. இதில் பல்வேறு தகவல்கள் வெளியானது. திருப்பாலை தனியார் பள்ளியில் மாணவிகளை அழைத்து வர பஸ் வசதி உள்ளது. இந்த நிலையில் பள்ளி பஸ்சில் நேற்று பழுதாகி நின்று விட்டது.

பள்ளி நிர்வாகம் கிட்டத்தட்ட 150 மாணவிகளை ஒரே பஸ்சில் அடைத்து வீடுகளுக்கு அனுப்பி வைத்தது. அழகர்கோவில், மாங்குளம், பொய்கைகரைபட்டி, அப்பன்திருப்பதி, கள்ளந்திரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டிய மாணவிகளுக்கு பஸ்சில் இடம் கிடைக்கவில்லை.

அவர்கள் நின்று கொண்டு பயணிக்க நேர்ந்தது. கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பள்ளி பஸ்சின் வாகன ஓட்டுநர், அதே பகுதியில் உள்ள சந்துக்குள் பஸ்சை 30 நிமிடமாக நிறுத்தி வைத்தார்.

பள்ளியில் இருந்து களைப்புடன் வீடு திரும்பிய மாணவிகளை, பஸ்சில் அடைத்து வைத்து காக்க வைத்ததால் ஜனனி, ரம்யா, பாவனா , பிரஜிதா உள்பட 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் காரணமாக மயக்கம் ஏற்பட்டது.

அவர்களுக்கு கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஜனனி, ரம்யா, பாவனா, பிரஜிதா ஆகிய 4 மாணவிகள், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருத்திகா கூறுகையில், பள்ளி மாணவிகள் மயக்கமடைந்தது, ஒரே பஸ்சில் அதிக அளவில் மாணவிகளை அழைத்துசென்றது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றார்.

மதுரை தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சொந்தமான பஸ், போக்குவரத்து அதிகாரிகளுக்கு பயந்து தெருவுக்குள் நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? அப்படி என்றால் அந்த வாகனம் போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயங்கியதா? என்று தெரியவில்லை.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் விசாரணை நடத்த வேண்டும். மதுரை மாவட்டத்தில் ஓடும் பள்ளி வாகனங்களை தினந்தோறும் சோதனை நடத்த வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பள்ளி மாணவ, மாணவிகளின் உயிரை பாதுகாக்க முடியும்" என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News