பாலத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு வயது குழந்தை சாவு
- பாலத்தில் இருந்து கீழே விழுந்த ஒரு வயது குழந்தை இறந்தது.
- போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை நகரில் உள்ள தெற்குவசால் என்.எம்.ஆர்.பாலத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. 30 ஆண்டு களுக்கு மேலான பழைய பாலம் என்பதால் சில இடங்களில் பாலத்தின் தடுப்புகள் சேதமடைந்து காணப்படுகின்றன.
மேலும் பாலம் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த பாலத்தில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் விபத்தில் சிக்குவதும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தெற்கு வாசல் பாலத்தில் தந்தை யுடன் சென்ற 1 வயது பெண் குழந்தை தவறி விழுந்து இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. அதன் விபரம் வருமாறு:-
மதுரை சோலையழகு புரம் முதல் தெருவை சேர்ந்தவர் முத்துகருப்பன். இவருக்கு 1 வயதில் கவிப்பிரியா என்ற மகள் இருந்தார். சம்பவத்தன்று தனது மகளை மோட்டார் சைக்கிளின் முன்புறம் அமரவைத்து வெளியே புறப்பட்டார்.
தெற்குவாசல் என்.எம்.ஆர்.பாலத்தில் சென்ற போது முன்னால் சென்ற வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக முத்து கருப்பன் திடீரென பிரேக் பிடித்தார். இதில் மோட்டார் சைக்கிள் முன்பு அமர்ந்தி ருந்த கவிப்பிரியா நிலை தடுமாறி பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தாள். இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிய கவிப்பிரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.