ஷேர் ஆட்டோவில் இருந்து விழுந்து மூதாட்டி சாவு
- ஷேர் ஆட்டோவில் இருந்து விழுந்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள என்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பொன்னம்மாள்(வயது72). இவர் நேற்று தாதன்குளம் சமத்துவபுரத்தில் 100 நாள் வேலை பார்த்துவிட்டு மாலையில் வீட்டுக்கு புறப்பட்டார்.
தாதன்குளத்தில் இருந்து ஷேர் ஆட்டோவில் பொன்னம்மாள் பயணம் செய்தார். அப்போது ஆட்டோவில் அளவுக்கு அதிகமான ஆட்கள் இருந்ததால் அவர் சீட்டின் ஓரத்தில் அமர்ந்ததாக தெரிகிறது.
ஷேர் ஆட்டோ சென்று கொண்டிருந்தபோது பொன்னம்மாள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நிலைமை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி பொன்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சாலை விதிகளை மதிக்காமல் ஷேர் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமான ஆட்களை ஏற்றிச்செல்கின்றனர்.
இதனால் விபத்துக்கள் நிகழ்ந்து உயிர்ப்பலியும் ஏற்படுகிறது. மேலும் ஷேர் ஆட்டோக்கள் அதிவேகத்தில் இயக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. எனவே இது தொடர்பாக போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.