உள்ளூர் செய்திகள்

மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு கண் பார்வை கிடைத்துள்ளது

Published On 2022-06-27 07:51 GMT   |   Update On 2022-06-27 07:51 GMT
  • மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு கண் பார்வை கிடைத்துள்ளது என டிரஸ்டி சவுமியா விஜயகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.
  • குடும்ப பிரச்சினை, வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்களுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்புடன் இணைந்து இலவசமாக கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரை

மதுரை விளாங்குடி பகுதியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மகன் நினைவாக தொடங்கப்பட்ட ஆர்.ஜெ.தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் அறக்கட்டளை தலைவர் ஜெயந்தி ராஜூ, டிரஸ்டிகள் சவுமியா விஜயகுமார், கணேஷ்பிரபு, ரம்யா ஆகியோர் பங்கேற்றனர். அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து டிரஸ்டி சவுமியா விஜயகுமார் கூறியதாவது:-

எனது சகோதரன் ஆர்.ஜெ. தமிழ்மணி நினைவாக கடந்த 2014-ம் ஆண்டு முதல் அறக்கட்டளை தொடங்கப்பட்டு மதுரையில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறோம். 27-வது பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாம்களில் அரவிந்த் கண் மருத்துவமனை, பிரீத்தி மருத்துவமனை, ராதா பல் மருத்துவமனைகளை சேர்ந்த சிறந்த மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து அதில் பாதிப்பு உள்ளவர்களை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

குறிப்பாக கண் பார்வை தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் கண்ணாடிகள் மற்றும் பல் தொடர்பான பிரச்சினைகள், முடநீக்கியல், காது-மூக்கு-தொண்டை சிகிச்சைகள், எலும்பு தொடர்பான சிகிச்சைகள் அனைத்தும் அறக்கட்டளை சார்பில் இலவசமாக செய்து தரப்படுகிறது.

இந்த மருத்துவ முகாம்கள் மூலம் 10 ஆயிரம் பேர் கண் பார்வை பெற்றுள்ளனர். 1000 பேருக்கு அறுவை சிகிச்சைகளின் மூலம் பார்வை கிடைத்துள்ளது. 3 ஆயிரம் பேருக்கு கண் கண்ணாடிகளை வழங்கியுள்ளோம்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில் இந்த முகாம் தொடர்ந்து நடத்தப்படும்.

மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் உரிய மருத்துவ வசதிகளை செய்து முடித்தவுடன் மற்ற பகுதிகளிலும் அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்களை நடத்த உள்ளோம்.

மேலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கம்ப்யூட்டர், தையல், எம்பிராய்டரி ஆகிய மூன்று மாத இலவச பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சியின் மூலம் 1,200 பெண்கள் பயனடைந்துள்ளனர். மேலும் குடும்ப பிரச்சினை, வாழ்க்கையில் விரக்தியடைந்த பெண்களுக்கு பிரம்மகுமாரிகள் அமைப்புடன் இணைந்து இலவசமாக கவுன்சிலிங்கும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கவுன்சிலிங்கில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பயன் அடைந்துள்ளனர்.

இவ்வாறு சவுமியா விஜயகுமார் கூறினார்.

Tags:    

Similar News