உள்ளூர் செய்திகள்

முகக்கவசம் அணியாத 115 பேரிடம் அபராதம் வசூல்

Published On 2022-07-02 07:34 GMT   |   Update On 2022-07-02 07:34 GMT
  • முகக்கவசம் அணியாத 115 பேரிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
  • விதிமுறைகளை கடைபிடிக்க தவறியதாக 53 நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.8 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை

மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை தினமும் 10 பேர் வீதம் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நேற்று மட்டும் ஒரே நாளில் 49 ஆக அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக மதுரை மாவட்டத்தில் 182 பேர் நோய் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்களுக்கு மதுரை தனியார் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு சிலர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புக்கு உட்பட்ட நோயாளிகளில் 26 பேர் நேற்று நோய் குணமாகி வீடு திரும்பினர் .

மதுரையில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். இல்லை யெனில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் அனீஷ் சேகர் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தார். ஆனாலும் பொதுமக்களில் சிலர் அலட்சியம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களை கண்காணித்து, அபராதம் விதிக்கும் வகையில், வருவாய் துறையினர் அடங்கிய 15 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அவர்கள் மதுரையின் 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் ஜூன் மாதம் 30-ம் தேதி முதல் முகக்கவசம் அணியாதவரிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.முதல் நாளில் மட்டும் 62 பேரிடம் ரூ.24 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில் மதுரை மாவட்ட வருவாய்துறை கண்காணிப்பு குழுவினர் நேற்று முகக்கவசம் அணியாதவரிடம் அபராதம் வசூலித்தனர். அப்போது பொதுமக்களில் 23 பேர் முகக்கவசம் அணியாதது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு ரூ.7000 அபராதம் விதிக்கப்பட்டது.

அடுத்தபடியாக தனியார் நிறுவனத்தில் முகக்கவசம் மற்றும் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க தவறியதாக 53 நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு ரூ.8 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் நேற்று மட்டும் 53 பேரிடம் ரூ.15 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 2 நாட்களில் மட்டும் முக கவசம் அணியாத 115 பேரிடம் இருந்து ரூ.40 ஆயிரத்து 100 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News