உள்ளூர் செய்திகள்

சிவன் கோவில்களில் விடிய விடிய வழிபாடு

Published On 2023-02-19 08:03 GMT   |   Update On 2023-02-19 08:03 GMT
  • சிவன் கோவில்களில் விடிய விடிய பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
  • சரவண பொய்கையில் உள்ள சிவபெருமானுக்கு சர்வ பூஜைகள் நடந்தது.



 இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நடந்த சிவராத்திரி விழாவில் நடைபெற்ற மாணவிகளின் பரதநாட்டியம்.

மதுரை

சிவபெருமான் 63 திரு விளையாடல்களை நிகழ்த்திய மதுரை தலத்தில் இறைவனே மணிமுடி தாங்கி ஆட்சி செய்வதாக ஐதீகம். மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் சிவனுக்கு உகந்த திருவிழாக்கள் நடத்தப்படுவது வழக்கம். மகாசிவராத்திரி திருவிழா நேற்று தொடங்கியது. நேற்று சனி பிரதோஷம் ஆகும். 2 அம்சங்களும் அமைந்த இந்த திருவிழாவில் கலந்து கலந்து கொள்வதற்காக பக்தர்கள் சிவன் கோவில்களுக்கு கூட்டம், கூட்டமாக வந்தனர்.

மதுரை மாவட்டத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை கோவில் நடை திறந்திருந்தது. அங்கு 4 கால பூஜைகள் நடத்தப்பட்டன. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், ஆராதனை நடத்தப்பட்டது. பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் வழிபாடு செய்தனர்.

மதுரை மாவட்டத்தில் சிவராத்திரி திருவிழாவிற்காக கோவில்களில் நேற்று மாலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை வரை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரருக்கு நேற்று இரவு 11.45 மணிக்கு முதல்கால பூஜையும், 12.45 மணிக்கு 2-ம் கால பூஜையும், அதிகாலை 1.45 மணிக்கு 3-ம் கால பூஜையும், 2.45 மணிக்கு 4-ம் கால பூஜையும் நடந்தன. அதிகாலை 3:45 மணிக்கு அடுத்த ஜாம பூஜை, 4 மணிக்கு பள்ளியறை பூஜை, 5 மணிக்கு திருவனந்தல் பூஜை நடத்தப்பட்டன. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் அருகில் உள்ள சத்தியகிரீ சுவரருக்கு பிரதோஷ வழிபாடு நடத்தப்பட்டது. இரவு 9.30 மணி அளவில் முதல் கால பூஜை நடந்தது. தொடர்ந்து 4 கால பூஜைகள், சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது.

திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுனை கண்ட சிவ பெருமான் க பால், பன்னீர், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிவபெருமான் ருத்ராட்சம், நாகபரணம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்களுடன் காட்சி அளித்தார்.

சரவண பொய்கையில் உள்ள சிவபெருமானுக்கு சர்வ பூஜைகள் நடந்தது. காஞ்ச ரம்பேட்டை, பாறைப்பட்டி பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டன .

மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவில், தெப்பக்குளம் முக்தீசுவரர் கோவில், சிம்மக்கல் ஆதி சொக்கநாதர் கோவில், தெற்கு வாசல் தென்திருவாலவாய சுவாமி கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், திருவாதவூர் திருமுறை நாதர் சுவாமி கோவில், ஆமூர் ஐம்பொழில் ஈஸ்வரன் கோவில், சோழ வந்தான் பிரளயநாதர் கோவில், திருவேடகம் ஏடக நாதர் சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாச்சல ஈஸ்வரர் கோவில், திருவால வாயநல்லூர் மீனாட்சி- சுந்தரேசுவரர் கோவில், விக்கிரமங்கலம் மருததோய ஈஸ்வரமுடையார் கோவில், பேச்சியம்மன் படித்துறை காசி விஸ்வநாதர் கோவில், சுடுதண்ணீர் வாய்க்கால் கடம்பவனேசுவரர் கோவில் உள்பட பல்வேறு சிவாலயங்களில் திருவிளக்கு பூஜையும், சங்கு அபிஷேகமும் நடத்தப்பட்டது.

சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் சிவராத்திரியை முன்னிட்டு குலதெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள குலதெய்வ கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் நேற்று இரவு குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து தங்கி இருந்து விடிய, விடிய பூஜைகள் நடத்தி சிவபெருமானை வழிபட்டனர்.

Tags:    

Similar News