செல்போன் கோபுரம் மாயம்: போலீசார் விசாரணை
- செல்போன் கோபுரம் மாயமான வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்போன் நிறுவன அதிகாரி வேங்கடகிருஷ்ணன், ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார்.
மதுரை
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் முத்து வேங்கடகிருஷ்ணன் (55). இவர் செல்போன் நிறுவனத்தில் அதிகாரியாக உள்ளார். இந்த நிலையில் அந்த நிறுவனம், மதுரை தோப்பூரில் ரூ.29 லட்சம் செலவில் செல்போன் ேகாபுரத்தை அமைத்தது.
இதனை தொழில்நுட்ப ஊழியர் சிவகுமார் பராமரித்து வந்தார். சம்பவத்தன்று காலை இவர் தோப்பூருக்கு சென்றார். அங்கு நிலை நிறுத்தப்பட்டு இருந்த செல்போன் கோபுரத்தை காணவில்லை. இதுகுறித்து அவர் சென்னை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தார். செல்போன் நிறுவன அதிகாரி வேங்கடகிருஷ்ணன், ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தோப்பூரில் கோகிலா என்பவருக்கு சொந்தமான நிலத்தில், செல்போன் நிறுவனம் கோபுரம் அமைத்து இருந்தது.
இதற்காக அந்த நிறுவனம், கோகிலாவுக்கு வாடகை செலுத்தியது. அந்த நிறுவனம் சில ஆண்டுகளாக வாடகை பாக்கி செலுத்தவில்லையாம். இந்த நிலையில் செல்போன் டவர் மாயமாகி உள்ளது. இந்த சம்பவத்தில் கோகிலா தரப்புக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.