உள்ளூர் செய்திகள்

ஆதார் மையம் திறந்திருப்பதையும், அதில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருப்பதையும் படத்தில் காணலாம்.

மாலைமலர் செய்தி எதிரொலி:ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் பூட்டிக்கிடந்த ஆதார் மையம் திறப்பு- வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் என அறிவிப்பு

Published On 2023-05-29 08:56 GMT   |   Update On 2023-05-29 08:56 GMT
  • ஆலங்குளத்திற்கு அதனை சுற்றி அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.
  • அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆதார் மையத்தை திறந்துள்ளனர்.

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்திற்கு அதனை சுற்றி அமைந்துள்ள 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய மற்றும் அவசர தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

குறிப்பாக ஆதார் கார்டு திருத்தம், வருமானச்சான்று, சாதிச்சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள், ரேசன் கார்டு, பட்டா விண்ணப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கும் ஆலங்குளம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள தாலுகா அலுவலகத்திற்கு தான் மக்கள் தினமும் வந்து செல்கின்றனர்.

இந்த அலுவலகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சான்றிதழ்கள் விண்ணப்பித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு அந்த வளாகத்தில் ஆதார் மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றிய ஊழியர்கள் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிடமாற்றம் செய்யப்பட்டதால் ஒரு மாதமாக அந்த மையம் பூட்டியே கிடந்தது. இதனால் பொதுமக்கள் அங்கு வந்து ஏமாந்து திரும்பி சென்றனர்.

இதுதொடர்பாக கடந்த 22-ந்தேதி மாலைமலரில் செய்தி வெளியானது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆதார் மையத்தை திறந்துள்ளனர். இதுதொடர்பாக அந்த மையத்தின் முன்பு ஒரு நோட்டீசையும் ஒட்டி உள்ளனர்.

அதில், நிரந்தர பணியாளர் வரும் வரைக்கும் செவ்வாய், வியாழன், சனி ஆகிய 3 நாட்கள் ஆதார் மையம் தற்காலிக பணியாளர்களை கொண்டு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முழுமையாக பூட்டிக்கிடந்த நிலையில், தற்போது வாரத்தில் 3 நாட்கள் ஆதார் மையம் செயல்படுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். விரைவில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News