கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்
- காட்டு யானைகள் சேதாரம் செய்யாத வண்ணம் மின்வேலி அமைத்து தர வேண்டும்.
- சிறப்பு முகாம் அமைத்து நோய்க்கான தடுப்பூசியினை வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஊராட்சி குழுவின் சாதாரணக் கூட்டம், மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மலையோர கிராம மக்களின் விசவசய பயிர்களை காட்டு யானைகள் சேதாரம் செய்யாத வண்ணம் மின்வேலி அமைத்து தர வேண்டும்.
காட்டு யானை தாக்கி இறந்த நபர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குவதை உயர்த்தி வழங்கிட வேண்டும். கிராமப்புற மக்கள் வளர்க்கும் கால்நடைகளை கோமாரி நோய் தாக்காதவாறு சிறப்பு முகாம் அமைத்து நோய்க்கான தடுப்பூசியினை வழங்க வேண்டும்.
ஓசூர் மற்றும் கெலமங்கலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் டாடா கம்பெனியில் வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுப்பதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த படித்த ஆண், பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி, பணி நியமனம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில், மாவட்ட ஊராட்சி குழு அலுவலக செயலர் சாந்தா, உதவியாளர் சத்தியவதி, இளநிலை உதவியாளர் சரவணன், செந்தாமரை செல்வி மற்றும் 19 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.