உள்ளூர் செய்திகள்

பின்னலாடை வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டி சாதனை- திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

Published On 2025-04-17 17:28 IST   |   Update On 2025-04-17 17:28:00 IST
  • திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.
  • அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.

திருப்பூர்:

இந்தியாவின் ஆயத்த ஆடை வர்த்தகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் முந்தைய ஆண்டை விட வர்த்தகம் உயர்ந்து வந்த நிலையில், கடந்த 2024-25-ம் நிதியாண்டு ஏற்றுமதியில் 10 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் கடந்த நிதியாண்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி ரூ.1 லட்சத்து 36 ஆயிரம் கோடியாகும். இதில் திருப்பூர் பின்னலாடைத்துறையின் பங்கு 49 சதவீதமாகும்.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த சாதனை, பின்னலாடை துறையின் நீடித்த வேகத்தையும், இந்திய நிட்வேர் மற்றும் ஆடைகளுக்கான வலுவான உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறியதாவது:-

இந்திய ஆயத்த ஆடையின் சீரான, நிலையான வளர்ச்சி மாதந்தோறும் திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகத்தின் மீதான நம்பிக்கை பிரதிபலிப்பதாக இருந்தது. குறிப்பாக ஆயத்த ஆடை வர்த்தகத்தில் இந்த ஆண்டு திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி 15 முதல் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டும் என்று கடந்த ஜனவரி மாதம் நான் தெரிவித்தேன்.

அதபோல் கடந்த ஆண்டை விட திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. நாம் எதிர்பார்த்தது போல் ரூ.40 ஆயிரம் கோடி என்ற இலக்கை அடைந்து சாதனை படைத்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. பின்னலாடை ஏற்றுமதியின் வளர்ச்சி என்பது திருப்பூர் உற்பத்தியாளர்களுக்கு மிகவும் ஊக்கமளிக்கும். ஏற்றுமதியாளர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அடுத்த ஆண்டுகளில் இந்த மேல்நோக்கிய வளர்ச்சியை தக்க வைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:-

முந்தைய ஆண்டைவிட, கடந்த நிதியாண்டின் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தபட்சம் 15 சதவீதம் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் 20 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது. ரூ.40 ஆயிரம் கோடியை எட்டுவோம் என்று நம்பினோம். அதை நோக்கியே எங்களின் பயணம் இருந்தது. அதன்படி கடந்த நிதியாண்டு வர்த்தகம் ரூ.40 ஆயிரம் கோடியை எட்டியது மகிழ்ச்சியளிக்கிறது. 2030-ம் ஆண்டுக்குள் ரூ.1 லட்சம் கோடி என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News