உள்ளூர் செய்திகள்

காதல் தகராறில் துணை நடிகரை கடத்தி தாக்குதல்- காதலியின் உறவினர்கள் மீது புகார்

Published On 2023-03-13 15:41 IST   |   Update On 2023-03-13 15:41:00 IST
  • முத்துபிரசாத்தை சரமாரியாக தாக்கியதால் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது.
  • துணை நடிகர் முத்துபிரசாத்தை தேடி உறவினர்கள் வந்ததும் அவரை அங்கேயே விட்டு விட்டு கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

திருவள்ளூர்:

பட்டாபிராம், பம்பை சிந்து நகர் சேக்காடு பகு தியை சேர்ந்தவர் முத்து பிரசாத் (26).சினிமாவில் துணை நடிகராக உள்ளார்.

இவர் துணை நடிகையாக உள்ள பாண்டிச்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒரு வரை காதலித்து வருகிறார். அந்த துணை நடிகை பூந்தமல்லியில் உள்ள தன்னுடைய அக்காள் வீட்டில் தங்கி படங்களில் நடிக்கிறார்.

இதற்கிடையே துணை நடிகைக்கும், வேறு ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து நிச்சயம் செய்தனர். ஆனால் துணைநடிகை திருமணத்துக்கு மறுத்து துணை நடிகர் முத்து பிரசாத்தை திருமணம் செய்யப்போவதாக கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த துணை நடிகையின் குடும்பத்தினரும், நிச்சயம் செய்யப்பட்ட புதுமாப்பிள்ளையும் சமாதானப்படுத்தி வந்தனர். ஆனால் துணை நடிகை திருமணத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. இதனால் அவர் துன்புறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அவர் காதலனிடம் கூறி உள்ளார்.

இந்நிலையில் துணை நடிகர் முத்து பிரசாத் மற்றும் அவரது நண்பர் ஆகிய 2 பேரையும் மர்ம கும்பல் சமாதானம் பேச அழைத்தனர்.

காரில் பூண்டி ஏரி அருகே உள்ள பெண்ணலூர் பேட்டை காட்டுப் பகுதிக்கு கடத்தி சென்றனர்.

அங்கு துணை நடிகர் முத்து பிரசாத் மற்றும் அவரது நண்பரை அழைத்துச் சென்று முத்து பிரசாத்தை சரமாரியாக ஆறு பேர் கொண்ட கும்பல் கட்டை மற்றும் கைகளால் தாக்கி பெட்ரோல் கேன் மற்றும் கத்தி வைத்துக்கொண்டு கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

முத்துபிரசாத்தை சரமாரியாக தாக்கியதால் இதில் அவரது உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உடன் வந்த நண்பர் தாங்கள் இருக்கும் இடம் குறித்து மற்ற நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து துணை நடிகர் முத்துபிரசாத்தை தேடி உறவினர்கள் வந்ததும் அவரை அங்கேயே விட்டு விட்டு கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

முன்னதாக முத்து பிரசாத்தை சட்டை இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வழிநெடுகிலும் முதுகில் கட்டையால் கடத்தல் கும்பல் தாக்கி உள்ளனர். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு துணை நடிகர் முத்து பிரசாத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பெண்ணலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டது. அதில் துணை நடிகையின் குடும்பத்தினர் மற்றும் துணை நடிகைக்கு நிச்சயம் செய்யப்பட்ட வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

காதல் தகராறில் துணை நடிகர் கடத்தி தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News