உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2023-07-17 11:54 IST   |   Update On 2023-07-17 11:54:00 IST
  • ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.
  • கேரளாவில் இருந்து வந்த பலரும் குழித்துறை தாமிரபரணியாற்றில் பலிதர்ப்பணம் செய்தனர்.

கன்னியாகுமரி :

இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் ஆடி அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் இந்துக்கள் அதிகாலை யிலேயே எழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள புண்ணிய தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

அதேபோல ஆடி அமாவாசையான இன்று காலை கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரி வேணி சங்கமம் சங்கிலித்துறை கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள். அவர்கள் கடலில் நீராடிவிட்டு வந்து கடற்கரையில் அமர்ந்து இருக்கும் புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்தனர். அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்து சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும் நீராடி தங்களது முன்னோர்க ளை நினைத்து தர்ப்பணம் செய்தனர்.

பின்னர் கடற்கரையில் உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில் நிலைய சந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ள சர்க்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த முறை ஆடி மாதம் 2 அமாவாசை நாட்கள் வருகிறது. இந்த ஆடி மாதத்தில் மாத பிறப்பான இன்றும் ஆடி மாதத்தின் கடைசி நாளான அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந்தேதியும் ஆடி அமாவாசை வருகிறது.

இதில் 2-வதாக அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 16-ந்தேதி வரும் ஆடி அமாவாசையை தான் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடைபி டிக்கிறார்கள். இதனால் எந்த ஆடி அமாவாசையை கடைப்பிடிப்பது என்பதில் பக்தர்கள் குழப்பமான நிலையில் இருந்து வந்தனர். இதன் காரணமாக இந்த ஆடி மாதத்தின் முதல் நாளான இன்று வந்த அமாவாசையை பெரும்பாலான பக்தர்கள் கடைபிடிக்கவில்லை. இதனால் ஆடி அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் குறைந்த அளவு பக்தர்களே புனித நீராடினார்கள். இருப்பினும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டி ருந்தன. போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதார வசதிகளும் செய்யப்பட்டிருந்தன. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு குறைந்த அளவு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி அமாவாசை விழா இன்று கடைபிடிக்கப்படாததால் கோவில்களிலும் குறைந்த அளவு பக்தர்கள் கூட்டமே காணப்பட்டன.

குழித்துறை தாமிரபரணி ஆறு, திற்பரப்பு அருவி பகுதிகளில் இன்று பலரும் மறைந்த முன்னோர்களுக்கு பலி தர்ப்பணம் செய்தனர். இந்த ஆண்டு 2 ஆடி அமாவாசை வருவதால் கேரளா பஞ்சாங்க முறைப்படி கேரளாவில் இருந்து வந்த பலரும் குழித்துறை தாமிரபரணியாற்றில் பலிதர்ப்பணம் செய்தனர்.

Tags:    

Similar News