மார்த்தாண்டத்தில் பட்டப்பகலில் கடைக்குள் புகுந்து நகை பறிப்பு
- நகைக்கடையில் மதியம் 1 மணி அளவில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர்
- 45 வயது மதிக்கத்த 2 டிப்-டாப் ஆசாமிகளின் உருவம் பதிந்துள்ளது.
கன்னியாகுமரி :
மார்த்தாண்டம் அருகே முளங்குழி, செம்பருத்தி விளையை சேர்ந்தவர் விஜூ (வயது 38). இவர் மார்த்தாண்டம் மற்றும் குனத்துக்கால் பகுதியில் 2 நகை கடைகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று மார்த்தாண்டம் தாட்டாகுடி பகுதியில் மெயின் ரோட்டில் உள்ள நகைக்கடையில் மதியம் 1 மணி அளவில் 2 மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். பின்னர் கடைக்குள் சென்ற மர்ம நபர்கள் கம்மல் விலைக்கு வாங்குவது போல் நடித்து கம்மல் மாடல்களை எடுத்து தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் இவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் அடைந்த பெண் பணியாளர் நீங்கள் யார்? உங்களுக்கு என்ன வேண்டுமென கேட்டுள்ளார். உடனே உஷாரான மர்ம நபர்கள் ஒரு ட்ரேயில் இருந்த 7 ஜோடி கம்மல்களை பறித்து சென்றுள்ளனர்.
அவர்கள் தயாராக வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து பார்த்துள்ளனர். அதில் 45 வயது மதிக்கத்த 2 டிப்-டாப் ஆசாமிகளின் உருவம் பதிந்துள்ளது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் மக்கள் நெருக்கம் மிகுந்த மார்த்தாண்டம் பகுதியில் நகை கடையில் புகுந்து கம்மல்களை பறித்துச்சென்ற சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.