கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம்
- ஆடி கிருத்திகையையொட்டி நாளை நடக்கிறது
- லங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளல்
கன்னியாகுமரி :
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி கிருத்திகை விழா நாளை (9-ந்தேதி) நடக்கிறது.
இதையொட்டி நாளை காலை 10 மணிக்கு சாஸ்தா சன்னதியில் இருந்து பக்தர்கள் தோளில் காவடி எடுத்து கோவிலை சுற்றி மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக வருகின்றனர். பின்னர் காலை 11 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி சுப்பிர மணிசாமிக்கு எண்ணை, பால், தயிர், நெய், விபூதி, சந்தனம், மஞ்சள் பொடி, இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி மேளதாளங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம்வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
அதன்பிறகு மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்படுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி ஸ்ரீ குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே உள்ள பழத்தோட்டம் முருகன்குன்றத்தில் உள்ள வேல்முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா நாளை (9-ந்தேதி) நடக்கிறது. இதையொட்டி சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடக்கிறது. பகல் 12.30 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.