உள்ளூர் செய்திகள்

மண்டைக்காடு அருகே கம்ப்யூட்டர் என்ஜினீயர் வீட்டில் கொள்ளை

Published On 2023-08-01 13:33 IST   |   Update On 2023-08-01 13:33:00 IST
  • மர்ம நபர்கள் எடுத்து சென்ற பணம், நகை, பொருட்கள் குறித்து உடனே விபரம் தெரியவில்லை.
  • சி.சி.டி.வி.காமிராவின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றதாக வீட்டினர் தெரிவித்தனர்

கன்னியாகுமரி :

குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்தவர் ஆன்றனி. இவரது மகன் செபாஸ்டின் (வயது 38). சிங்கப்பூரில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். செபாஸ்டின் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மண்டைக்காடு அருகே காரியாவிளையில் சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்டி உள்ளார்.

இந்த வீட்டினை செபாஸ்டின் தாயார் சாயின்மேரி (68) தினமும் காலை வந்து பார்த்து செல்வது வழக்கம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள செபாஸ்டின் மனைவி அனுஸ்ரீயின் தந்தை இறந்துபோனார்.

இவரது இறுதி சடங்கில் கலந்துகொள்ள செபாஸ்டின் சிங்கப்பூரிலிருந்து 2 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார். பின்னர் கொச்சி சென்று மாமானாரின் இறுதி சடங்கில் கலந்துகொண்டு நேற்று காரியாவிளை வந்தார். பின்னர் இரவு மனைவி, 2 குழந்தைகளுடன் மீண்டும் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். இன்று காலை தாயார் சாயின் மேரி வழக்கம்போல் காரியவிளை வீட்டை பார்க்க வந்தார்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வீட்டின் பின் பக்கம் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் மேல் மாடி அறைகளை உடைத்து, பீரோவையும் உடைத்துள்ளனர். மர்ம நபர்கள் எடுத்து சென்ற பணம், நகை, பொருட்கள் குறித்து உடனே விபரம் தெரியவில்லை. சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ள செபாஸ்டினை தொடர்புக்கொண்டால் தான் முழு விபரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். வீட்டுக்குள் புகுந்த நபர்கள் சொத்து பத்திரம் ஒன்றையும், சி.சி.டி.வி.காமிராவின் ஹார்ட் டிஸ்க்கையும் எடுத்து சென்றதாக வீட்டினர் தெரிவித்தனர். தொடர்ந்து மோப்ப நாய், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News