உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

இரணியல் அருகே அரசு பஸ் மீது கல் வீசிய வாலிபர் கைது

Published On 2023-01-02 08:13 GMT   |   Update On 2023-01-02 08:13 GMT
  • கல் வீச்சில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது.
  • போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

கன்னியாகுமரி:

நாகர்கோவிலில் இருந்து மிடாலத்துக்கு 31-ந் தேதி இரவு அரசு பஸ் புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சை ஆணையடி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் ஓட்டிச் சென்றார். கண்டக்டராக ஐரேனிபுரம் ஜஸ்டின் பணியாற்றினார்.

இந்த பஸ், இரணியல் அருகே உள்ள மடவிளாகம் பகுதியில் சென்ற போது, இருளில் மறைந்திருந்த 2 பேர் பஸ் மீது கல் வீசி தாக்கினர். இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த டிரைவர் சுபாஷ் உடனடியாக பஸ்சை நிறுத்தினார்.

ஆனால் கல் வீச்சில் பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது. டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் பஸ்சை விட்டு இறங்கி வருவதற்குள் கல் வீசிய மர்ம மனிதர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவம் குறித்து இரணியல் போலீசில், பஸ் டிரைவர் சுபாஷ் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் 2 பேர் மது போதையில் தள்ளாடிச் செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே அவர்கள் தான் பஸ் மீது கல் வீசியிருக்கலாம் என போலீசார் கருதினர். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் வில்லுக்குறி சடையப்பனார் தெருவை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நண்பரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News