உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

பலத்த காற்றில் சேதமடைந்த படகுகளில் உயிருக்கு போராடிய 12 மீனவர்கள் முட்டம் துறைமுகத்தில் கரை சேர்ந்தனர்

Published On 2023-01-29 07:59 GMT   |   Update On 2023-01-29 07:59 GMT
  • ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல்
  • வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் மீட்டனர்

கன்னியாகுமரி:

குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்த வர் லூக்காஸ் (வயது 44). இவர் கேரளாவில் சொந்தமாக விசைப்படகு வைத்து மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 23-ந் தேதி இவர் வழக்கம்போல் கொல்லம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க சென்றார். படகை லூக்காஸ் ஓட்டினார்.

அவருடன் தூத்துக் குடியை சேர்ந்த 2 பேர், கொல்லம் மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த தலா ஒருவர், ஆந்திராவை சேர்ந்த 5 பேர் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 3 பேருமாக 13 மீன் பிடித்தொழிலாளர்கள் சென்றனர். இவர்களது விசைப்படகு நேற்று முன்தினம் இரவு குமரி மாவட்டம் முட்டம் கடல் பகுதி 28 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்ப்பாரா மல் திடீரென கடலில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் படகு உடைந்து உள்ளே கடல் நீர் புகுந்தது. செய்வதறியாது தவித்த மீனவர்கள் படகில் புகுந்த நீரை இறைத்து வெளியேற்றினர். அப்போதும் நீர் படகுக்குள் புகுந்தது. இதனால் மீனவர் லூக்காஸ் படகை அருகில் கரை சேர்க்க இயக்கினார். ஆனால் பலத்த காற்று வீசியதால் படகு எதிர் திசையில் அடித்து சென்றது. படகை கட்டுப்படுத்த முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.பின்னர் 8 நாட்டிக்கல் தூரம் அடித்து சென்றபின் படகு கட்டுக்குள் வந்தது. அப்போது அந்த பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த பைபர் படகை லூக்காஸ் உதவிக்கு அழைத்தார். உதவிக்கு வந்த பைபர் படகில் மீனவர்கள் ஏறி பாதுகாப்பாக அமர்ந்தனர்.

நேற்று காலை லூக்காஸ் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தேங்காய்பட்டணம் துறைமுகம் வந்தார். ஆழ்கடலில் படகில் வெள்ளம் புகுந்ததையும், மீனவர்கள் மற்றொரு பைபர் வள்ளத்தில் ஏறி தவிப்பதாகவும் உறவினர்களுக்கு தகவல் கூறினார். உடனே வாணியக்குடி மற்றும் குளச்சல் மீனவர்கள் 4 வள்ளம், ஒரு விசைப்படகில் முட்டம் கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லூக்காஸ் படகு நோக்கி விரைந்து சென்றனர். பல மணிநேரம் சென்ற மேற்படி வள்ளங்கள், விசைப்படகு லூக்காஸ் படகை அடைந்தது. பின்னர் அவர்கள் பைபர் படகில் இருந்த 12 மீனவர்கள், உடைந்த லூக்காஸ் விசைப்படகையும் மீட்டு கரை நோக்கி விரைந்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் மீனவர்கள் அனைவரும் முட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் பத்திரமாக கரை சேர்ந்தனர். இதையடுத்து மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Tags:    

Similar News