உள்ளூர் செய்திகள்

சிவபுரத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளை தடுத்து நிறுத்தும் வனத்துறையினர்.

களக்காடு சிவபுரம் சாலை திடீர் மூடல்-வனத்துறை நடவடிக்கையால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி

Published On 2023-05-07 14:25 IST   |   Update On 2023-05-07 14:25:00 IST
  • சிவபுரம் கிராமத்தை சுற்றிலும் நீர் ஓடைகள் ஓடுகின்றன.
  • இங்கு குளிக்க நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை

களக்காடு:

களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சிவபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் நீர் ஓடைகள் ஓடுகின்றன.

சுற்றுலா பயணிகள்

இதில் குளிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலாப் பயணிகளும் கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். சிவபுரம் பகுதி களக்காடு நகராட்சிக்கு உட்பட்டதாகும்.

வனத்துறையின் கட்டுப்பாட்டிற்குள் வராததால் இங்கு குளிக்க நுழைவு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்பதால் சிவபுரத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக களக்காடு வன த்துறையினர் சிவப்புரத்திற்கு செல்லும் சாலையை தடுப்புகள் வைத்து அடைத்துள்ளனர். மேலும் சிவபுரத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியும் மறுத்து வருகின்றனர். தற்போது கோடைகால விடுமுறை தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.

வனத்துறை அனுமதி மறுப்பு

சிவபுரத்திற்கு வனத்துறை யினர் அனுமதி மறுப்பதால் அவர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். அத்துடன் அங்கு பணியில் இருக்கும் வனத்துறை ஊழியர்களிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து நெல்லை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி பொதுச்செயலாளர் களந்தை மீராசா வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவபுரம் பகுதி நகராட்சிக்கு உட்பட்டது. இங்கு செல்ல வனத்துறை தடை விதிப்பது கண்டிக்கத்தக்கது. சிவபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிவதால் தலையணையில் நுழைவு கட்டண வசூல் பாதிக்கப்படுகிறது. இதனால் கட்டண வசூலை அதிகரிக்க வனத்துறையினர் இது போன்று செய்வது ஏற்கக் கூடியது இல்லை.

களக்காட்டை பொருத்த வரை குளிப்பதற்கும் தண்ணீர் இல்லை. குடிப்பதற்கும் தண்ணீர் இல்லை. எனவே தான் பொதுமக்கள் சிவபுரத்தை நாடுகின்றனர். அதற்கும் தடை விதிப்பதை கண்டித்து விரைவில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

எனவே வழக்கம் போல சுற்றுலா பயணிகள் சிவபுரத்திற்கு செல்ல மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News