தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
- காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய போது மர்மநபர் கைவரிசை
- நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில்ரூ.34,700 பணம் கொள்ளை
கோவை,
கோவை நரசிம்ம நாயக்கன் பாளையம் அருகே உள்ள பகவான் கார்டனை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன் (வயது 31). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு இந்த வீட்டில் குடியேறினார்.
சம்பவத்தன்று கோகுல கிருஷ்ணன் வீட்டின் மாடியில் உள்ள படுக்கை அறையில் மனைவியுடன் படுத்து தூங்கினார். அப்போது காற்றுக்காக மாடியில் உள்ள ஜன்னல் மற்றும் கதவை பூட்டாமல் தூங்கினார். நள்ளிரவு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த மர்மநபர் யாரோ அறையில் இருந்த பீரோ திறந்தனர். பின்னர் அதில் இருந்த ஆரம், நெக்லஸ், செயின், ேதாடு உள்பட 10 அரை பவுன் தங்க நகைகள் வெள்ளி கொலுசு, ரூ.700 பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
பின்னர் கொள்ளையர்கள் எதிர்புறம் உள்ள வீட்டில் வசித்து வரும் ஜெயக்குமார் என்பவரின் வீட்டு கதவை உடைத்துள்ளனர். ஆனால் வீட்டிற்குள் செல்ல முடியாததால் அவர் சென்று விட்டனர்.
மறுநாள் காலையில் கண் விழித்து பார்த்த கோகுலகிருஷ்ணன் வீட்டின் பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அவர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து பெரிய நாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிய தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 அரை பவுன் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
சூலூர் சுல்தான்பேட்டை அருகே உள்ள குமரன் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (48). இவர் அந்த பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார்.
இவர்களது நிறுவனத்தில் சிவா, பிரபாகரன், கார்த்திக், சோலைமலை ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை சுப்பிரமணி அவரது வீட்டின் அருகே உள்ள வாடகை வீட்டில் குடிய மர்த்தி உள்ளார். சம்பவத்தன்று இவர்களது வீட்டின் கதவை உடைத்து மர்மநபர் உள்ளே நுழைந்தனர்.
அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.34,700 பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து சுப்பிரமணி சுல்தான்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நிதி நிறுவன உரிமையாளர் வீட்டில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.