உள்ளூர் செய்திகள்

தொழில்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிப்பு

Published On 2023-08-04 10:07 GMT   |   Update On 2023-08-04 10:07 GMT
  • மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வருகிற 16-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும்.

கிருஷ்ணகிரி,  

ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வருகிற 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஆகஸ்ட் 2023-24-ம் ஆண்டு காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை மேற்கொள்ள கடந்த 1-ந் தேதி முதல் வருகிற 16-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயில விரும்பும் பயிற்சியாளர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் வருகிற 16-ந் தேதிக்குள் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி நேரடி சேர்க்கையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பயிற்சி காலத்தின் போது பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், மடிகணினி, சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, ஷு ஆகியவை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும்.

ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சியாளர்களுக்கு அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், பயிற்சி முடித்து செல்லும் பயிற்சியாளர்களுக்கு 100 சதவீதம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படுகிறது.

எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குனர், முதல்வர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஓசூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News