உள்ளூர் செய்திகள்

இரா. லட்சுமணன் எம்.எல்.ஏ.

விழுப்புரம் தொகுதியில் ஒரே மாதத்தில் உடைந்த தளவானூர் தடுப்பணையை கட்ட வேண்டும்: இரா. லட்சுமணன் எம்.எல்.ஏ. சட்டசபையில் கோரிக்கை

Published On 2023-04-03 05:13 GMT   |   Update On 2023-04-03 05:13 GMT
  • தென்பெண்ணையாற்றின் குறுக்கே, ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை, ஒரே மாதத்தில் உடைந்து சிதறியதால், சுமார் 62 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது
  • விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட நரியாற்றினை புனரமைத்துத் தர வேண்டும். விழுப்புரம் நகர எல்லைக்குட்பட்ட வி.மருதூர் ஏரியை புனரமைத்துத் தர வேண்டும்.

விழுப்புரம்: 

நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை ஆகியவற்றுக்கான மானியக்கோரிக்கைகள் மீது நடந்த விவாதத்தின் போது விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமனன் தொகுதியின் கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தார் அதன்படி, கடந்த ஆட்சியில் விழுப்புரம் தொகுதியில் தளவானூர் கிராமத்தில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே, ரூ.25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணை, ஒரே மாதத்தில் உடைந்து சிதறியதால், சுமார் 62 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. எனவே, வெகு விரைவில் தளவானூர் அணைக்கட்டை கட்டி முடிக்க வேண்டும். விழுப்புரம் தொகுதி வேலியம்பாக்கம், திருப்பாச்சலூர், பில்லூர், சேர்ந்தனூர், அரசமங்கலம் மற்றும் ஏ.கே .குச்சிப்பாளையம் கிராமங்களில் மலற்றாற்றில், வெள்ளத்தடுப்பு கரைகளும், தடுப்பு சுவரும் அமைத்துத்தர வேண்டும். விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட நரியாற்றினை புனரமைத்துத் தர வேண்டும். விழுப்புரம் நகர எல்லைக்குட்பட்ட வி.மருதூர் ஏரியை புனரமைத்துத் தர வேண்டும்.

விழுப்புரம் தொகுதி கோலியனூர் வாய்காலின் எஞ்சியுள்ள பகுதியில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், தடுப்பு சுவர் அமைத்திடவும் வேண்டும். பில்லூர் - சேர்ந்தனூர் இடையே மலற்றாற்றில் அமைந்துள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைத்துத் தரவேண்டும். வி.புதூரில் இருந்து கரைமேடு வழியாக கெங்கராம்பாளையம் செல்லும் சுமார் 4 கி.மீ சாலையை ஊரக வளர்ச்சித் துறையிடமிருந்து நெடுஞ்சாலைத்துறைக்கு மாற்றி புனாரமைத்து தரவேண்டும். வளவனூர் - பூவரசன்குப்பம் சாலையை முழுமையாக அகலப்படுத்தித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் பேசினார்.

Tags:    

Similar News