உள்ளூர் செய்திகள்

தஞ்சையில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சையில், பா.ஜனதா ஆர்ப்பாட்டம்- பரபரப்பு

Published On 2023-07-18 10:10 GMT   |   Update On 2023-07-18 10:10 GMT
  • மேகதாதுவில் அணை கட்டுவோம் என கூறிவரும் கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
  • டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும்.

தஞ்சாவூர்:

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று தொடர்ந்து கூறி வரும் கர்நாடக மாநில அரசை கண்டித்து தஞ்சை சின்ன ஆஸ்பத்திரி அருகே இன்று மதியம் பா.ஜ.க.வினர் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் ஜெய்சதீஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பார்வையாளர் முரளி கணேஷ், பொருளாளர் விநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கர்நாடக மாநில அரசை கண்டித்தும், மேகதாதுவில் அணை கட்டும் முடிவை நிரந்தரமாக தடுத்து நிறுத்துவோம் என்ற உறுதி நிலைப்பாட்டை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் மாவட்ட செயலாளர் அம்ரித் அரசன், மாவட்ட மகளிர் அணி தலைவர் கவிதா, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் சிவப்பிரகாசம், தொழில்துறை பிரிவு மாவட்ட தலைவர் பொன்.மாரியப்பன், மாநகரத் தலைவர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டுவோம் என்று கர்நாடக மாநில முதலமைச்சர் ,துணை முதலமைச்சர் கூறி வருகின்றனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பெங்களூரில் இன்று நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். ஆனால் அவர் மேகதாது விவகாரம் குறித்து கர்நாடக முதலமைச்சரிடம் இதுவரை பேசவில்லை. தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.

கடந்த ஜூன் மாதம் 19 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு, கர்நாடகம் தர வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இந்த மாதத்திற்குரிய தண்ணீரும் சரியான முறையில் தரவில்லை. தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரை ஒழுங்கான முறையில் கர்நாடக அரசு கொடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாவில் அணைக்கட்டும் கர்நாடக அரசு முடிவை கண்டித்து வரும் 25ஆம் தேதி விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. ஆதரவு அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News