உள்ளூர் செய்திகள்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நெல்லை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தஞ்சையில், நெல் மணிகளை கொட்டி விவசாயிகள் நூதன போராட்டம்

Published On 2023-01-27 15:22 IST   |   Update On 2023-01-27 15:22:00 IST
  • விவசாயிகள் கொட்டியுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
  • ரங்கநாதபுரத்தில் உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அப்போது பாபநாசம் வட்டம் விழுதியூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

விழுதியூர் பகுதியில் கடந்த காலங்களில் இரண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தது. தற்போது ஒரு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஊராட்சி எல்லைக்குட்பட்ட ரெங்கநாதபுரத்தில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த மற்றொரு நெல் கொள்முதல் நிலையத்தில் நெல்லை கொட்டி வைத்து விவசாயிகள் ஒரு வார காலமாக காத்து கிடக்கும் அவலம் உள்ளது. உடனடியாக ரெங்கநாதபுரம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் கொட்டியுள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.பின்னர் மனுவை அளித்துவிட்டு அவர்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு நின்று தரையில் நெல்லை கொட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரங்கநாதபுரத்தில் உடனடியாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க கோரி கோஷங்கள் எழுப்பினர். இந்த நூதன போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News