உள்ளூர் செய்திகள்

மின்வேலியில் சிக்கி இறந்து கிடந்த தமிழ் வீரன்.

சட்டவிரோதமாக விளைநிலத்தில் மின்வேலி அமைத்த விவசாயி உள்பட 2 பேர் கைது

Published On 2023-08-15 15:05 IST   |   Update On 2023-08-15 15:05:00 IST
  • நிலத்திற்குள் சென்ற போது, நிலங்களை சுற்றிலும் காட்டுப்பன்றிக்காக போட்டு இருந்த மின்கம்பியை தமிழ் வீரன் மிதித்துள்ளார்.
  • காவிரியப்பன் மற்றும் வேட்டைக்குச் சென்ற சேட்டு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

பென்னாகரம், 

தருமபுரி மாவட்டம், பெரும்பாலை அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் தமிழ்வீரன் (வயது 52). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் சேட்டு (42). நண்பர்களான இவர்கள் 2 பேரும் நாட்டுத்துப்பாக்கியுடன் புதுப்பட்டி வனப்பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றனர்.

அப்போது நரசிபுரம் விவசாயி காவிரியப்பன் நிலத்திற்குள் சென்ற போது, நிலங்களை சுற்றிலும் காட்டுப்பன்றிக்காக போட்டு இருந்த மின்கம்பியை தமிழ் வீரன் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சேட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இதுகுறித்து பெரும்பாலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழ்வீரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காவிரியப்பன் மற்றும் வேட்டைக்குச் சென்ற சேட்டு ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் மலைகிராமப்புற பகுதிகளில் விலங்குகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க சட்டவிரோதமாக விளைநிலங்களை சுற்றி மின்கம்பி வேலை அமைத்து வருகின்றனர். இதனால் விலங்குகள் மட்டும் இன்றி மனித உயிர்களும் பலியாகிறார்கள்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு பயிருக்காக போட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியானது. இது பற்றி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் யாரும் கண்டு கொள்ளவில்லை.

இதனால் வனத்துறையினர் மற்றும் மின்வாரிய துறையினர் தருமபுரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஓட்டியுள்ள பகுதிகளில் உள்ள விளைநிலங்களை ரோந்து சென்று தினமும் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News