உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் சூறாவளி காற்று, இடி மின்னலுடன் 2 மணி நேரம் பலத்த மழை

Published On 2023-06-09 07:25 GMT   |   Update On 2023-06-09 07:25 GMT
  • நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று வீசியது.
  • 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் விழுப்புரத்தை அடுத்த சாலமேடு பகுதியில் வேரோடு சாய்ந்தது.

விழுப்புரம்:

விழுப்புரம் பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதனைத் தொடர்ந்து மே மாதம் முதல் கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. குறிப்பாக அக்னி நட்சத்திர நாட்களில் வெயிலின் அளவு 105 டிகிரியை தாண்டியது. இதனால் விழுப்புரம் நகர பகுதி பகல் 12 மணிமுதல் மாலை 4 மணி வரை வெறிச்சோடிக் கிடந்தது. மே மாதம் இறுதியில் அக்னி நட்சத்திர வெயில் முடிந்த நிலையிலும், ஜூன் மாதத்திலும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. இதனை அடுத்து தமிழ்நாடு அரசு பள்ளிகள் திறப்பு தேதியை தள்ளிவைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக சென்னை, புதுச்சேரி, கடலூர், கள்ளக்குறிச்சி பகுதியில் லேசானது முதல், சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை விழுப்புரத்தில் பெய்யாதா? வெயிலின் தாக்கம் குறையாதா? என்று பொதுமக்கள் ஏங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு 9 மணியளவில் விழுப்புரத்தில் லேசான குளிர்ந்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து இடி, மின்னலுடன் கூடிய சூறாவளி காற்று வீசியது. தொடர்ந்து சுமார் 2 மணிநேரம் பலத்த மழை பெய்தது. இதனால் விழுப்புரம் நகரப் பகுதியில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. விழுப்புரம் நகரமே குளிர்ந்தது என்றால் மிகையாகாது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதேசமயம் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரம் விழுப்புரத்தை அடுத்த சாலமேடு பகுதியில் வேரோடு சாய்ந்தது. இதே போல விழுப்புரம் நகர சாலைகளில் இருந்த பல்வேறு மரங்கள் சாலையில் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மழை விட்டவுடன், நகராட்சி நிர்வாகம், பொதுப் பணித்துறை, வனத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலையில் முறிந்து விழுந்து கிடந்த மரக்கிளைகளை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர்செய்தனர்.

Tags:    

Similar News