உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உதவித்தொகை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க 20-ந்தேதி கடைசி நாள்

Published On 2023-05-17 13:15 IST   |   Update On 2023-05-17 13:15:00 IST
  • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    சேலம்:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால், திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக, தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுகள் மட்டும்) - எலைட், பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (எம்ஐஎம்எஸ்), வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (சிடிஎஸ்) என 3 வகைகளில் செயல்படுத்தப்படுகிறது.

மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்று, பதக்கம் வென்றிருக்க வேண்டும்.

இந்த திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை வருகிற 20-ந்தேதி மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிர, பிற விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது.

தகுதியான வின்ணப்பங்கள், அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டு, அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும். பின்னர், நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, இறுதியாக தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர். அதிகபட்சம் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இந்த 3 திட்டங்களுக்கு கடந்த நவம்பர் மாதம் 30-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 22-ந்தேதி வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பெற்ற பன்னாட்டு, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள பதிவு ஐ.டி. மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News