திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி கோவிலில் கருட வாகன புறப்பாடு - திரளான பக்தர்கள் தரிசனம்
- கோவில் தாமிரபரணி நதிக் கரையில் சிறு குன்றின் கீழ் அமைந்துள்ளது.
- திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட வாகன புறப்பாடு நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி திருக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் தாமிரபரணி நதிக் கரையில் சிறு குன்றின் கீழ் அமைந்துள்ளது.
இக்கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவம் கடந்த 3-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாக்களில் காலை திருமஞ்சனம், மாலையில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் 5-ம் நாளான நேற்று கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. மாலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடாஜல பதிக்கு கொழு மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சனம் நடை பெற்றது. தொடர்ந்து கருட வாகனப் பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காட்டப் பட்டது. கோவில் பிரகாரம் சுற்றி வந்ததும் கருட வாகனத்திற்கு திருக்குடைகள் சாற்றப்பட்டு வீதி புறப்பாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.