நன்னடத்தை விதியை மீறியதால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஓசூர் ரவுடி -உதவி கலெக்டர் உத்தரவால் நடவடிக்கை
- பல்வேறு போலீஸ் நிலை யங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நிலுவையில் உள்ளது.
- ராதாகிருஷ்ணனை மீண்டும் தருமபுரி சிறையில் போலீசார்அடைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நியூ டெம்பிள் அட்கோ பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 48). இவர் மீது திருட்டு, கொள்ளை, ஆள் கடத்தல், கொலை மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன.
இது தொடர்பாக பல்வேறு போலீஸ் நிலை யங்களில் இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணையும் நிலுவையில் உள்ளது.
பிரபல ரவுடியான ராதாகிருஷ்ணன் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுக்க வலியுறுத்தி ஓசூர் உதவி கலெக்டரால் நன்னடத்தை பிணைய பத்திரம் பெறப்பட்டு வந்துள்ளது. தற்போது இவ்வாறு இவர் நன்னடத்தைக்காக ஓராண்டு பிணைய பத்திரம் பெற்றுள்ளார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதாக தெரிய வந்தது. இதையடுத்து ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், நன்னடத்தை விதிகளை மீறிய குற்றத்துக்காக ராதாகிருஷ்ணனை உதவி கலெக்டர் சரண்யா முன்னிலையில் ஆஜர்படுத்தினார்.
இது குறித்து விசாரித்த உதவி கலெக்டர் சரண்யா ஏற்கனவே நன்னடத்தை விதியை மீறிய ராதாகிருஷ்ணனுக்கு நிலுவையில் உள்ள 6 மாத சிறை தண்டனையில் அடைக்கும்படி உத்தர விட்டார். அதன்பேரில் ராதாகிருஷ்ணனை மீண்டும் தருமபுரி சிறையில் போலீசார்அடைத்தனர்.