உள்ளூர் செய்திகள்

இந்திய ராணுவ செவிலியர் சேவை மேஜர் ஜெனரலுக்கு விஜய் வசந்த் எம்.பி. வாழ்த்து

Published On 2023-08-04 13:17 IST   |   Update On 2023-08-04 13:17:00 IST
  • இந்த பதவியை அடையும் முதல் பெண்மணி இவர் என்பது இந்த பதவிக்கு அழகு சேர்க்கிறது
  • கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது நமக்கு பெருமை

இந்திய ராணுவ செவிலியர் சேவையில் தமிழகத்தில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ''இந்திய ராணுவத்தின் உயர் பதவியான மேஜர் ஜெனரல் அந்தஸ்துக்கு பதவி உயர்வு பெற்றுள்ள மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலோஸ் புளோராவிற்கு எனது மரியாதை கலந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த பதவியை அடையும் முதல் பெண்மணி இவர் என்பது இந்த பதவிக்கு அழகு சேர்க்கிறது. இவர் நமது கன்னியாகுமரி மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர் என்பது நமக்கு பெருமை சேர்க்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

பதவி உயர்வு பெற்றுள்ள இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் வடக்கூர் ஆகும். இவருடைய தந்தை லூர்துசாமி பிள்ளை, தாய் தெரசம்மாள். இவர் கடந்த 5-1-1965-ம் ஆண்டு பிறந்தார். இவருக்கு 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் உண்டு. மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2-வது சகோதரரான ஜாண் பிரிட்டோ எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

3-வது சகோதரர் ஜார்ஜ் ராஜாவும் ராணுவத்தில் பணியாற்றியவர். ஆனால் இவர் தற்போது உயிரோடு இல்லை. அன்னம்மாள், டெசி ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர். இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பள்ளி படிப்பை முடித்தவுடன் மூத்த சகோதரரான அந்தோணி சாமியின் அறிவுரைப்படி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவு பணிக்கான எழுத்து தேர்வை எழுதி அதில் தேர்வானார். பின்னர் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்று வந்தார். இந்த நிலையில் செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார்.

Tags:    

Similar News