உள்ளூர் செய்திகள் (District)

சிறப்பு அலங்காரத்தில் பெருவுடையார், சந்தனகாப்பு அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன் அருள்பாலிப்பு.

மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா; சிறப்பு அலங்காரத்தில் சுவாமி- அம்பாள் அருள்பாலிப்பு

Published On 2022-11-02 10:29 GMT   |   Update On 2022-11-02 10:29 GMT
  • சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று தொடங்கி நாளை வரை சதய விழா தொடங்கியது.
  • பல்வேறு கலைநடனங்கள், கலை நாட்டியங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

தஞ்சாவூர்:

உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தநாள் விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் சதய நட்சத்திரம் அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு கொரோனா பரவலால் 1 நாள் மட்டுமே சதய விழா கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் வெகுவாக குறைந்ததால் வழக்கம்போல் 2 நாள் விழாவாக நடைபெறுகிறது.

அதன்படி இந்த ஆண்டு சதய விழா தஞ்சை பெரிய கோவிலில் இன்று தொடங்கியது. நாளை வரை சதய விழா நடைபெற உள்ளது.

விழாவின் முதல் நாளான இன்று காலை 9 மணிக்கு இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. முன்னதாக பெரியநாயகி அம்மனுக்கு சந்தனம் காப்பு அலங்காரமும், பெருவுடையாருக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.

காலை 9.15 மணிக்கு டி.கே.எஸ். பத்மநாபன் குழுவினரின் மங்கள இசை நடைபெற்றது . தொடர்ந்து களிமேடு அப்பர் பேரவையின் திருமுறை அரங்கம் நடைபெற்றது ‌‌‌ .

இதையடுத்து மேடை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு சதய விழா குழு தலைவர் து.செல்வம் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசினார். போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, அரண்மனை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, சதய விழா குழு துணை தலைவர் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பலர் கலந்துகொண்டு பேசினர்.

இதையடுத்து கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன் தொடக்க உரையாற்றினார். தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். திருக்கோவில் தேவார இன்னிசை முழக்கம் என்ற தலைப்பில் திருவையாறு அரசர் கல்லூரி முதல்வர் சண்முக செல்வகணபதி பேசினார். இதேபோல் ராஜராஜன் பெற்ற வெற்றிகள் என்ற தலைப்பில் தமிழ் வேள் உமாமகேசுவரனார் கல்லூரி பேராசிரியர் இளமுருகன், மாமன்னரின் சமயபொறை என்ற தலைப்பில் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர் சிவபெருமான், செம்பியன் மாதேவி குந்தவை நாச்சியார் வளர்ப்பில் அருண்மொழித்தேவன் என்ற தலைப்பில் ந.மு.வே‌. நாட்டார் கல்லூரி குழு உறுப்பினர் விடுதலை வேந்தன், தஞ்சை ராஜராஜேஸ்வரமும் திருவிசை பாவும் என்ற தலைப்பில் சென்னை புலவர் பிரபாகரமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இன்று மாலையில் திருமுறை பண்ணிசை, திருமுறையின் திரு நடனம், பரதநாட்டியம், நாதசங்கமம், வயலின் இசை நிகழ்ச்சி , கவியரங்கம், நகைச்சுவை சிந்தனை பாட்டு பட்டிமன்றம் ஆகியவை நடைபெறுகிறது.

இன்று நடந்த முதல் நாள் விழாவில் சதய விழா குழு உறுப்பினர் இறைவன், கோவில் உதவி ஆணையர் கவிதா, மருத்துவக் கல்லூரி முதல்வர் பாலாஜி நாதன் , தாசில்தார் சக்திவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர்.

தொடர்ந்து நாளை இரண்டாம் நாள் விழா நடைபெற உள்ளது. நாளை காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து மாமன்னர் ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதேபோல் பல்வேறு கட்சியினர், இயக்கத்தினர் மாலை அணிவிக்கின்றனர். பின்னர் திருமுறை திருவீதி உலா, பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெறும்.

இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளுக்காக நடத்தப்பட்ட தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு மேடை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

Tags:    

Similar News