வேலூரில் திருவள்ளுவர் சிலை முன்பு விவசாயி அரை நிர்வாண போராட்டம்
- ஏரி வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் பானை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த பாப்பான் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய் சாமி. இவர் கணியம்பாடி ஒன்றிய விவசாய சங்க தலைவராக இருந்து வருகிறார்.
இன்று காலை பழைய பஸ் நிலையம் வந்த ஜெய் சாமி அங்குள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு அரை நிர்வாண நிலையில் அமர்ந்து நெற்பயிரை வைத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயியிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர் காட்டுப்புத்தூர் அடுத்த பாப்பான் தோப்பு கிராமத்தில் உள்ள ஏரி வண்டல் மண்ணை அங்குள்ள ரியல் எஸ்டேட் அதிபர்கள் கடத்திச் சென்று கிணறு போல் வெட்டி அதில் பதுக்கி வைத்துள்ளனர்.
ஏரி வண்டல் மண்ணை விவசாயம் மற்றும் பானை செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ரியல் எஸ்டேட் அதிபர்கள் வண்டல் மண்ணை பதுக்கி வைப்பதால் விவசாயத்திற்கு வண்டல் மண் கிடைக்காமல் அவதி அடைந்து வருகிறோம்.
இது குறித்து கலெக்டர் அலுவலகம் மற்றும் கணியம்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
போலீசாரின் சமாதானத்தை ஏற்காமல் ஜெய் சாமி தொடர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பழைய பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.