உள்ளூர் செய்திகள்

சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்த ஈரோடு மாணவர்கள்: போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

Published On 2023-08-09 08:05 GMT   |   Update On 2023-08-09 08:05 GMT
  • பெற்றோர் அடிக்கடி திட்டியதால் மாணவர்கள் வீட்டைவிட்டு ஓட்டம்
  • சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தபோது போலீசார் மீட்டனர்

ஈரோட்டைச் சேர்ந்த முருகேசன், சசிகுமார் ஆகிய இருவர் தங்களுடைய 14 வயது மகன்களை நள்ளிரவு முதல் காணவில்லை என ஈரோடு ரெயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், ரெயில் மூலம் வெளியூர் சென்றிருக்கலாம் எனவும் தங்களது சந்தேகத்தை தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து சிறுவர்களின் விவரங்களை பெற்று அனைத்து ரெயில்வே காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் வைத்திருக்கும் செல்போன் எண்னை வைத்து அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என சைபர் செல் மூலம் கண்காணித்தபோது அவர்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகே இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சென்னை சென்ட்ரல் ரெயில்வே காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக சிறுவர்களை மீட்க வேண்டி சென்னை மாநகர காவல்துறையினருடன் இணைத்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தின் சுற்றுப்புறத்தில் தேடி மேற்படி சிறுவர்கள் இருவரையும் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ள தகவல் அவர்களுடைய பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்தவுடன் சிறுவர்களுக்கு முறையான அறிவுரைகள் வழங்கி பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். துரிதமாக செயல்பட்டு ஈரோட்டில் இருந்து ரெயில் மூலம் சென்னை வந்து சுற்றித்திரிந்த சிறுவர்களை கண்டுபிடித்து மீட்ட காவல் துறையினர்களை காவல் துறை உயர் அதிகாரிகள் பாராட்டினார்கள்.

10-ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவர்களிடம் விசாரிக்கும்போது ''தாங்கள் இருவரும் நண்பர்கள். சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர்கள் திட்டியதால் வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்தோம். சினிமாவில் நடிக்கும் ஆசையில் சென்னைக்கு வந்தோம் என்றனர்.

ரெயில் பயணிகள் பாதுகாப்பு சம்மந்தமான புகார்களுக்கு ரெயில்வே காவல் உதவி மைய 24*7 எண். 1512 மற்றும் வாட்ஸ்அப் எண். 99625-00500-ஐ தொடர்பு கொள்ளவும்.

Tags:    

Similar News