உள்ளூர் செய்திகள்

கோடைகாலத்தில் சிறந்த மகசூல் கிடைக்கும் வழிமுறைகள்

Published On 2023-05-03 15:00 IST   |   Update On 2023-05-03 15:00:00 IST
  • மண்ணை புழுதிபட உழுது துகள்களாக மாற்றுவதால் காற்றோட்டம் அதிகரிக்கும்.
  • நிலத்தின் செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாகும்.

ஈரோடு:

கொடுமுடி வேளாண் உதவி இயக்குனர் யசோதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

மண்ணை புழுதிபட உழுது, துகள்களாக மாற்றுவதால் காற்றோட்டம் அதிகரிக்கும். மண்ணில் நுண்ணுயிர்கள் நன்கு வளரும். நிலத்தின் செடிகள், கழிவுகள் நன்கு மக்கி உரமாகும்.

களை கொல்லி, பூச்சி கொல்லி மருந்துகளின் வீரியம் குறைந்து, மண்ணின் விஷத்தன்மை குறையும். கோடை உழவால் மண் நன்றாக நயமாகிறது. நீர் ஊடுருவி செல்லும் தன்மை அதிகரித்து, பயிருக்கு நீர் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

நிலத்தின் சரிவுக்கு குறுக்காக வயலை நன்கு பல முறை புழுதிபட உழுதால், மழை நீர் மண்ணுக்கு அடியில் 10 முதல் 15 செ.மீ. ஆழம் உட்செல்லும்.

நீர் ஆவியாவதை தடுக்கும். வறட்சியிலும் பயிருக்கு தேவையான நீர் கிடைக்கும். பயிர் அறுவடை செய்த பின், பயிரின் தாள்கள் நிலத்தில் தேங்கும்.

அது பெரும்பாலான பூச்சிகளுக்கு உணவாக, தங்குமிடமாகி, முட்டைகள் இட்டு, பாதுகாக்கும் இடமாகும். இதனால், கோடை உழவால் களை செடிகள் மக்கி உரமாகும். களை விதை உற்பத்தி தடுக்கப்படும்.

பூச்சிகளின் முட்டைகள், கூண்டு புழுக்கள் அழிக்கப்படும். உழவின்போது வெளி வரும் புழு, முட்டைகளை உணவாக பறவைகள் உட்கொள்வதால் பூச்சிகளின் தாக்கம் குறையும்.

தாவர கழிவின் மக்கும் தன்மை அதிகரித்து மண் வளமாகும். எனவே கோடை மழை நீர் சிறிதும் வீணாகாமல் பயிருக்கு கிடைக்க ஏதுவாகும். மழை நீர் சேகரிப்பு திறன் அதிகரித்து சிறந்த மகசூல் கிடைக்கும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News