உள்ளூர் செய்திகள்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்த முடிவு

Published On 2023-03-08 09:37 GMT   |   Update On 2023-03-08 09:37 GMT
  • ஊரக வளர்ச்சி துறையில் கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது.
  • இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம்.

ஈரோடு:

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கதின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஊரக வளர்ச்சி துறையில் அனைத்து நிலை அலுவலர்களின் நலன் சார்ந்த கோப்புகள் ஆண்டு கணக்கில் முடங்கி கிடக்கிறது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

அலுவலர்களின் நலன், உரிமைகள் சார்ந்த கோப்பு களை உருவாக்கவதிலும், அரசாணை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த போக்கு மாற்றி கொள்ளப்பட வேண்டும்.

இந்த துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். தகுதியான அலுவலர்களுக்கு உதவி இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். அதேபோல உதவி செயற்பொறியாளர்கள், ஒன்றிய உதவி செயற்பொறியாளர்கள் பதவி உயர்வும் உடனடியாக வழங்க வேண்டும்.

ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலமாக ஊதியம், விடுபட்டுள்ள உரிமைகள், பணி விதிகள் தொடர்பான அரசாணையை முறையாக வெளியிட்டு செயல்படுத்த வேண்டும்.

100 நாள் வேலை திட்டப் பணியில் ஈடுபடும் கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும். முழு சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். முதற்கட்டமாக வரும் 13-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5.30 மணிக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்.

அடுத்தடுத்த போராட்டங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News