திருத்தணியில் ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரியை அப்புறப்படுத்தாமல் தார் சாலை போட்ட ஊழியர்கள்- பொதுமக்கள் எதிர்ப்பு
- தார் சாலையை சீரமைக்க ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- லாரியை அப்புறப்படுத்தாமல் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அப்படியே தார் சாலையை அமைத்து உள்ளனர்.
திருவள்ளூர்:
திருத்தணியில் இருந்து சோளிங்கர் வரையிலான 25 கிலோ மீட்டர் தூரத்திலான மாநில நெடுஞ்சாலை திருத்தணியில் இருந்து கன்னிகாபுரம் வரை உள்ள சாலை மிகவும் சேதமடைந்திருந்தது.
இதனை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனை ஏற்று திருத்தணியில் இருந்து கன்னிகாபுரம் வரை 3 கிலோ மீட்டர் தூர தார் சாலையை சீரமைக்க ரூ.1.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தார் சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருத்தணி போலீஸ் நிலையம் முன்பு குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை அப்புறப்படுத்தாமல் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் அப்படியே தார் சாலையை அமைத்து உள்ளனர்.
நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் இந்த செயலால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சாலை அமைக்கும் பணிகள் நடைபெறும் போது நெடுஞ் சாலைத்துறை உயர் அதிகாரிகள் யாரும் பார்வையிடுவதில்லை என்றனர். இதனாலேயே இது போன்ற குறைபாடுகளுடன் சாலை அமைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது பற்றி மாவட்ட கலெக்டர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.