உள்ளூர் செய்திகள்

வால்பாறை அருகே தொழிலாளியின் வீட்டை உடைத்து சேதப்படுத்திய யானைகள்

Published On 2023-11-14 14:21 IST   |   Update On 2023-11-14 14:21:00 IST
  • ஸ்டேன் மோர் எஸ்டேட் பகுதியில் கடந்த 2 நாட்களாக 17 காட்டு யானைகள் சுற்றி வந்தது.
  • வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை.

வால்பாறை,

கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஸ்டேன் மோர் எஸ்டேட் பகுதியில் கடந்த 2 நாட்களாக 17 காட்டு யானைகள் சுற்றி வந்தது.

இரவு நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சுந்தர்ராஜ் என்பவரின் வீட்டின் ஜன்னல் கதவு, சுவர் போன்றவைகளை உடைத்து சேதப்படுத்தின.

குட்டியானை ஒன்று வீட்டிற்குள் சென்று சமையல் அறையில் இருந்த பொருட்களை சேதப்படுத்தி கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு மற்றும் சமையல் பாத்திரங்களை வெளியே வீசி எறிந்தது. தீபாவளி நாள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருந்தனர்.

இதனால் உயிர் சேதம் இன்றி அவர்கள் தப்பினர். அருகில் இருந்தவர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து வால் பாறை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து காட்டு யானைகளை அப்பகுதியில் இருந்து விரட்டினர்.

காட்டு யானைகள் வீட்டை உடைத்த விவரம் அறிந்து வீட்டின் உரிமையாளர்கள் வந்து பார்த்து வேதனை அடைந்தனர். இச்சம்பவம் அறிந்த வார்டு உறுப்பினர் பாஸ்கர் நேரில் வந்து வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் தி.மு.க. நகர செயலாளர் சுதாகர், நகர மன்ற துணை தலைவர் செந்தில்குமார், வெங்கடேஷ், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது.

மேலும் வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுத்து நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று வீட்டின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் வனத்துறையினர் காட்டு யானைகளை குடியிருப்பு பகுதிக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News