தொண்டாமுத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி மூதாட்டி பலி
- சாலையில் நடந்து சென்ற மூதாட்டி அங்கம்மாள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
- தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வடவள்ளி,
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி அங்கம்மாள் (வயது98).
இவர் இன்று காலை அந்த பகுதியில் உள்ள கழிவறைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
மாதம்பட்டி-தொண்டாமுத்தூர் சாலையில் தீயணைப்பு நிலையம் அருகே வந்த போது, சாலையில் நடந்து சென்ற மூதாட்டி அங்கம்மாள் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அந்த சமயம் அந்த வழியாக தொண்டாமுத்தூரில் இருந்து மாதம்பட்டி நோக்கி தனியார் பள்ளி வாகனம் மாணவர்களை ஏற்றி கொண்டு வந்தது.
சாலையில் மூதாட்டி விழுந்ததை பார்த்த வாகனத்தின் டிரைவர், அவர் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பி இயக்க முயன்றார். அப்போது மூதாட்டி பள்ளி வாகனத்தின் பின் டயரில் சிக்கி கொண்டார்.
இதில் அவர் மீது பஸ்சின் டயர் ஏறி இறங்கியதால் மூதாட்டி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து ஓடி வந்து வாகனத்தை மறித்து டிரைவரை சிறை பிடித்தனர். சம்பவம் குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளி வாகனத்தின் டிரைவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி வாகனத்தின் டயரில் சிக்கி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.