உள்ளூர் செய்திகள்

கோவையில் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வீடு- வீடாக வினியோகம்

Published On 2023-07-11 09:18 GMT   |   Update On 2023-07-11 09:18 GMT
  • தமிழக அரசின் சார்பில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.
  • ரேஷன் கடைகளில் உதவி மையம் அமைகிறது

கோவை,

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான பயிற்சிக்கூட்டம் நடந்தது. இதில் கலெக்டர் கிராந்திகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் துணை தாசில்தார்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து கலெக்டர் கிராந்திகுமார் கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதில் ரேஷன்கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்து கொள்ளப்பட உள்ளது.

இதற்காக சம்பந்தப்பட்ட ஊழியர்கள் அந்தந்த மண்டல அலுவலகங்களில் தேவையான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பிறகு அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பான விண்ணப்பங்களை வழங்க வேண்டும்.

அதில் குடும்ப அட்டை எண், எந்த தேதியில் எப்போது முகாமுக்கு வர வேண்டும் ஆகிய விவரங்கள் இருக்க வேண்டியது அவசியம். இதற்காக தமிழக அரசின் சார்பில் செல்போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது.

அதனை ஊழியர்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இதற்காக பயோ மெட்ரிக் சாதனங்கள், மொபைல் கனெக்டர்கள் ஆகியவை வழங்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்களில் 70 சதவீதம் பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விடுவர். அதே நேரத்தில் எழுத படிக்க தெரியாதவர்கள் விண்ணப்பத்தை நிரப்புவதற்காக, ரேஷன் கடைகளில் உதவி மையம் அமைக்க வேண்டும். இங்கு இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்ட விண்ணப்பத்தில் ஆதார் எண், ரேஷன் கார்டு எண், மின் இணைப்பு எண், குடும்ப உறுப்பினர் ஆகியவை சரியாக பூர்த்தி செய்யப்பட்டு உள்ளதா? என்பதை சரி பார்த்து அதன்பிறகு மேற்கண்ட அம்சங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

குடும்ப அட்டை, ஆதார் அட்டை இல்லாத சிலர் வறுமைக் கோட்டின்கீழ் இருக்கலாம். எனவே அவர்கள் பற்றிய விவரங்களை தனியாக பட்டியலிட வேண்டும். அவர்களும் மேற்கண்ட திட்டத்தின்கீழ் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வங்கி கணக்கு இல்லாதவர்களின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்டு அதன்பிறகு கூட அவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்து தரலாம்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக அனைத்து நிலை அதிகாரிகளுக்கும் பயிற்சிகள் தரப்பட்டு கையேடுகளும் விநியோகிக்கப்பட உள்ளன. அவற்றில் விண்ணப்பதாரர் கேள்விக்கு எப்படி பதில் தரவேண்டும் என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News