பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை
தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. நிறைவேற்றவில்லை- பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- பெண்கள் ஆரத்தி எடுத்தனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களும் கொடுத்தனர்.
- நாங்குநேரியில் தொழில் நுட்பபூங்கா அமைக்க நாங்குநேரி ஜீயர் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கினார்.
களக்காடு:
தமிழக பாரதீய ஜனதா தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் என்ற பெயரில். மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். தற்போது நெல்லை மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
களக்காட்டில் நடைபயணம்
நேற்று மாலை அவர் அண்ணாமலை களக்காட்டில் நடைபயணம் சென்றார். களக்காடு அருகே எஸ்.என்.பள்ளிவாசலில் நடை பயணத்தை தொடங்கிய அவர் கோவில்பத்து, ஆற்றாங்கரை தெரு, திருக்கல்யாணத் தெரு, பெரிய தெரு, கோட்டை, புதிய பஸ்நிலையம் வழியாக நடந்து சென்று பொது மக்களை சந்தித்தார். அவருக்கு வழிநெடுக மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களும் கொடுத்தனர்.
பொதுமக்களிடம் அண்ணாமலை பா.ஜ.கவிற்கு ஓட்டு போடும்படி கேட்டுக் கொண்டார். அதன் பின் அவர், களக்காடு அண்ணாசிலை அருகே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க.வினர் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை. நாங்குநேரியில் விஜயநாராயணம் குளத்தை சீரமைப்போம் என்று எதிர்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் இங்கு வந்து பிரசாரம் செய்த போது கூறினார். ஆனால் அதை அவர் நிறைவேற்றவில்லை. விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர்.
500 பின்தங்கிய பகுதிகள்
தி.மு.க. ஆட்சியில் பள்ளியில் ஜாதி மோதல்கள் நடக்கின்றன. நாங்குநேரியில் 12-ம் வகுப்பு மாணவர் வெட்டப்பட்டுள்ளார். இந்தியாவின் தூண்கள் மாணவர்கள். அவர்கள் மத்தியிலும் ஜாதி மோதல்கள் உருவாகுகின்றன. நாங்குநேரியில் தொழில் நுட்பபூங்கா அமைக்க நாங்குநேரி ஜீயர் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கினார். ஆனால் அந்த திட்டமும் முழுமை பெறவில்லை.
தற்போது இந்தியா முழுவதும் 500 பின்தங்கிய பகுதிகளை பிரதமர் மோடி தேர்வு செய்துள்ளார். அதில் தமிழகத்தில் நாங்குநேரி உள்பட 14 பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மோடியின் பார்வை நாங்கு நேரியில் விழுந்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் நாங்குநேரி பகுதி முன்னேற்றம் அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அவருடன் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், தெற்கு மாவட்ட பா.ஜ.க. தொழில் பிரிவு தலைவர் பி. சங்கரநாராயணன், மாவட்ட செயலாளர் இ. சேர்மன்துரை, நகர தலைவர் ஏ. கணபதிராமன், ஒன்றிய தலைவர் ராமேஸ்வரன் உள்பட பலர் சென்றனர்.