உள்ளூர் செய்திகள்

கடந்த 6 மாதங்களில் ரேஷன் கடைகளுக்கு 1.48 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம்- இந்திய உணவு கழக கோவை மண்டல மேலாளர் தகவல்

Published On 2023-09-27 13:42 IST   |   Update On 2023-09-27 13:42:00 IST
  • விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை சுமார் ரூ.18க்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்கிறது.
  • 100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

கோவை,

அரிசி மற்றும் கோதுமை கொள்முதலில் தமிழ்நாடு பற்றாக்குறை மாநிலமாக உள்ளது.

பற்றாக்குறையை எதிர்கொள்ள பஞ்சாப், அரியானா, மத்தியபிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கர், ஓடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து ரெயில் சாலை மார்க்கமாக தமிழகத்துக்கு அரிசி கொண்டு வரப்படுகிறது.

அரிசி கொள்முதல் மற்றும் வினியோகம் குறித்துஎப்சிஐ கோவை மண்டல மேலாளர் மணிபூஷன்குமார் சுமன் கூறியதாவது:-

மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு பொது வினியோக அமைச்சகத்தின் கீழ் இந்திய உணவு கழகம் செயல்பட்டு வருகிறது.

பொதுவினியோக திட்டம்(ரேஷன் கடைகள்), இதர நலத்திட்டங்களுக்கு உணவு தானியங்களை வழங்கும் வகையில் விளைச்சல் அதிகம் உள்ள மாநிலங்களில் இருந்து பற்றாக்குறை மாநிலங்களுக்கு அரிசி, கோதுமையை கொண்டு வருவதில் இந்திய உணவு கழகம் முக்கிய பங்காற்றுகிறது.

விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை சுமார் ரூ.18க்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கொள்முதல் செய்கிறது. குறைந்தபட்ச ஆதார விலையின்படி இந்த விலையாணது நிர்ணயம் செய்யப்படுகிறது.

அதன்பிறகு அந்த நெல் அரிசி ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு அரிசியாக பெற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்படுகிறது.

அங்கிருந்து கூட்டுறவு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.

நெல் கொள்முதல், அரவை, போக்குவரத்து, அரிசி சேமிப்பு ஆகியவற்றுக்கு சராசரியாக ஒரு கிலோவுக்கு ரூ.33 செலவாகிறது.

இந்த செலவீனங்களை முழுமையாக உணவு மானியமாக தமிழக அரசுக்கு இந்திய உணவு கழகம் வழங்குகிறது.

மொத்த மக்கள் தொகையில் 67 சதவீதம் பேருக்கு வழங்கப்படும் அரிசிக்கான செல்வை முழூ மானியமாக மத்திய அரசு மூலம் இந்திய உணவு கழகம் வழங்குகிறது.

கடந்த ஜனவரிக்கு முன்பு வரை ஒரு கிலோ அரிக்கு மானியம் போக மாநில அரசிடம் இருந்து ரூ.3 பெறப்பட்டு வந்து. கடந்த ஜனவரி முதல் அந்த தொகையையும் மானியமாக மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

67 சதவீத ஒதுக்கீட்டுக்கு மேல் எஞ்சியுள்ளவர்களுக்கு தேவைப்படும் அரிசியை கிலோவுக்கு ரூ.6.10, கோதுமைக்கு ரூ.8.30 அளித்து மாநில அரசு இந்திய உணவு கழகத்திடம் இருந்து பெற்றுக்கொள்கிறது.

ரத்த சோகையை கட்டுப்படுத்தவும், இரும்பு சத்து, வைட்டமின் பி12 குறைபாட்டை தவிர்க்கவும், இந்திய உணவு கழகம் மூலம் கடந்த ஏப்ரல் முதல் முழுமையாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

100 கிலோ சாதாரண அரிசிக்கு 1 கிலோ செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

கோவை மண்டல இந்திய உணவு கழகத்தின் கீழ் உள்ள கிடங்குகள் மூலம் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு தேவையான அரிசி அனுப்பி வைக்கப்படுகிறது.

அதன்படி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பரை 1.48 லட்சம் மெட்ரிக் டன் செறிவூட்டப்பட்ட அரிசி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது இந்திய உணவு கழகத்தின் மேலாளர்கள் பிஜிமோல், நவநீத கிருஷ்ணன், தன்யா, அபிராமி, ஆத்மசீலன், மவுனிகாக உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News