உள்ளூர் செய்திகள்

டிஜிபி சைலேந்திரபாபு

பசும்பொன்னில் டிரோன்கள் மூலம் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு- டி.ஜி.பி. சைலேந்திரபாபு தகவல்

Published On 2022-10-29 11:05 IST   |   Update On 2022-10-29 11:05:00 IST
  • தேவர் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
  • சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கமுதி:

பசும்பொனில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (30-ந் தேதி) குரு பூஜையை முன்னிட்டு தேவர் நினைவிடத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.

தலைவர்கள் வருகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குருபூஜை விழாவிற்கு வாகனங்களில் வருவோர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பசும்பொன்னில் செய்யப்பட்டு உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவர் குருபூஜை விழாவையொட்டி ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பசும்பொன் கிராமத்தில் டிரோன்கள் மூலம் நவீன தொழில்நுட்பத்தில் துல்லியமாக முகத்தை காட்டும் எச்.டி. கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.

சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் அமைதியாக வந்து செல்ல அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ராமநாதபுரம் டி.ஐ.ஜி. மயில்வாகனன், எஸ்.பி. தங்கத்துரை மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News