உள்ளூர் செய்திகள்

ஆடி அமாவாசைக்காக பேரூர் படித்துறையில் தர்ப்பணம் கொடுக்க குவிந்த பக்தர்கள்

Published On 2023-07-17 09:16 GMT   |   Update On 2023-07-17 09:16 GMT
  • நொய்யல் ஆற்றில் தண்ணீர் இல்லாததால் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஷவரில் நீராடி சென்றனர்
  • 2 அமாவாசை வருவதாலும் 2-வது அமாவாசை தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

கோவை,

இன்று அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் பிறந்துள்ளது. இந்த வருட ஆடி மாதத்தில் 2 ஆடி அமாவாசை வருகிறது. இன்று மற்றும் அடுத்த மாதம் 16-ந் தேதி ஆடி அமாவாசை வருகிறது.

ஆடி அமாவாசையான இன்று தினம் தமிழகம் முழுவதும் பல இடங்களிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே, நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள தர்ப்பண மண்டபத்திலும் இன்று காலை முதலே கோவை மட்டுமன்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்தனர். அவர்கள் நேராக நொய்யல் படித்துறையில் உள்ள தர்ப்பண மண்டபத்திற்கு சென்றனர்.

அங்கு தங்கள் முன்னோர்களின் பெயரை சொல்லி திதி கொடுத்தனர். தொடர்ந்து எள் உருண்டை, பச்சரி சாதம் உள்ளிட்டவற்றை படைத்து, அவர்களை நினைத்து மனம் உருகி வழிபட்டனர்.

மேலும் அவர்களுக்கு பிடித்தமான உணவுகளை படைத்து, தீபாராதனை செய்து, முன்னோர்களை வழிபட்டனர். பின்னர் எள் உருண்டை மற்றும் பச்சரி சாதத்தை காகங்களுக்கு வைத்தனர். காகங்கள் வந்து சாப்பிட்டால் அது தங்கள் முன்னோர்களே வந்து சாப்பிட்டதாக பக்தர்கள் நினைப்பது ஐதீகம்.

திதி கொடுக்க வரும் பக்தர்கள் பேரூர் நொய்யல் ஆற்றில் நீராடுவது வழக்கம். ஆனால் தற்போது ஆறு வறண்டு காட்சியளிக்கிறது. இதன் காரணமாக கோவில் நிர்வாகம் பேரூர் படித்துறையில் பிரத்யேகமாக ஷவர் அமைத்திருந்தது.

இன்று திதி கொடுக்க வந்த பக்தர்கள் ஷவரில் குளித்து விட்டு சென்றனர். மேலும் ஆத்து விநாயகரை வணங்கி விட்டு, அங்கு நிற்கும் மாடுகளுக்கு அகத்திக்கீரையும் வாங்கி கொடுத்தனர். தொடர்ந்து பக்தர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று, பட்டீஸ்வரர், பச்சை நாயகி அம்மனை மனம் உருகி தரிசனம் செய்தனர். பின்னர் சிறிது நேரம் அங்கு இருந்து விட்டு மீண்டும் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர்.

வழக்கமாக ஆடி மாதத்தில் வரும் அமாவாசையில் பேரூர் படித்துறையில் பக்தர்கள் நிற்க முடியாத அளவுக்கு கூட்டம் அலைமோதும். இந்த வருடம் 2 அமாவாசை வருவதாலும் 2-வது அமாவாசை தான் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதாலும் இன்று பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

பக்தர்கள் வந்து திதி கொடுப்பதும், போவதுமாக இருந்தனர். இதனால் அங்கு எந்தவித போக்குவரத்து பாதிப்பும் ஏற்படவில்லை.

கோவில் நிர்வாகம் கூட்டம் வந்தால் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருந்தது.

Tags:    

Similar News