கிருஷ்ணகிரியில் கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கடந்த 2 ஆண்டுகளாக பணி மாறுதல்கள் வழங்கப்படாமல் உள்ளது.
- பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அந்தோணி ஆல்பர்ட் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் தில்லை நடராஜன், மோகன்ராஜ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநில துணை தலைவர் திலகர், மாநில துணை பொதுச் செயலாளர் ஹென்றி தாமஸ், அரசு அலுவலர் ஒன்றிய மாவட்ட தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பள்ளி கல்வித்துறையில் அடிப்படை பணியாளர் முதல் நேர்முக உதவியாளர் வரை பணிபுரிபவர்களுக்கு காலி பணியிடங்கள் இருந்தும்,
கடந்த 2 ஆண்டுகளாக பணி மாறுதல்கள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள். எனவே உடனடியாக பணி மாறுதல்கள் வழங்கவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி, மாவட்ட செயலாளர் கண்ணன், முன்னாள் மாநில துணை தலைவர் நந்தகுமார், நிர்வாகிகள் நாகராஜன், நாராயணன், ராமகிருஷ்ணன், கிருஷ்ணன், விஜியேந்திரன், அஞ்சலா, ஜெயசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.