உள்ளூர் செய்திகள்

லிங்காபுரம்-காந்தவயல் இடையே ரூ.14 கோடி செலவில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி தொடக்கம்

Published On 2023-04-27 15:02 IST   |   Update On 2023-04-27 15:02:00 IST
  • கடந்த 2005-ம் ஆண்டு லிங்காபுரம்-காந்தவயல் இடையே 21 அடி உயரத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.
  • தற்போது 168 அடி நீளம், 53 அடி உயரத்தில் பாலம் கட்ட தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சிக்குட்பட்ட 1-வது வார்டு பகுதியில் லிங்காபுரம் கிராமம் உள்ளது.

இங்கிருந்து பழங்குடியின கிராமங்களான காந்தவயல், உலியூர், ஆலுர், மேலூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பவானிசாகர் நீர்த்தேக்கத்தை தாண்டி செல்ல வேண்டும்.

இந்த நிலையில் ஆண்டு தோறும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான நீலகிரி, கேரளா பகுதியில் பெய்து வரும் மழைநீர் பவானிசாகர் நீர்த்தேக்கத்தில் தேங்கி நிற்கும்.

இதனிடையே வருடத்தில் 6 மாதங்கள் லிங்கபுரத்திலிருந்து காந்தவயல், ஆலுர், மேலூர், உலியூர் கிராமங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும்.

இதனையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு லிங்காபுரம்-காந்தவயல் இடையே 21 அடி உயரத்தில் உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது.

ஆனால் பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியில் நீர் பிடிப்பு அதிகமாகும் போது பாலம் தண்ணீரில் மூழ்குவது தொடர்கதையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்பகுதி மக்கள் விளை பொருட்களை எடுத்துச் செல்லவும், தங்களது அன்றாட தேவைகளுக்கு சென்று வரவும் சாலை வசதி இல்லாததால் நீர் தேக்கத்தின் வழியாக பரிசல் மற்றும் மோட்டார் படகு சேவையை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து தற்போது 168 அடி நீளம், 53 அடி உயரத்தில் இப்பகுதியில் உயர்மட்ட பாலம் கட்ட ரூ.14 கோடி செலவில் தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

தற்போது இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இதனிடையே இப்பணிகளை சிறுமுகை பேரூராட்சி தலைவர் மாலதி உதயகுமார், துணைத்தலைவர் செந்தில்குமார், வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News